இந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம்

தினமலர்  தினமலர்
இந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம்

காத்மாண்டு: நேபாள அரசு, சட்ட விரோதமாக இந்தியாவின் மூன்று பகுதிகளை இணைத்து வெளியிட்ட புதிய தேசிய வரைபட பாடப் புத்தகங்கள் விநியோகத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.

கடந்த, மே, 8ல், உத்தரகண்டின் தார்சுலா-லிபுலேக் கணவாயை இணைக்கும், 80 கி.மீ., தேசிய நெடுஞ்சாலையை, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். இதனால், ஆத்திரமடைந்த நேபாள அரசு, உத்தரகண்டின், கலபானி, லிபுலேக், லிம்பியாதுரா பகுதிகளை இணைத்து, திருத்தப்பட்ட புதிய தேசிய வரைபடத்தை வெளியிட்டது. இதற்கு, நேபாள பார்லி., ஒப்புதல் அளித்தது.நேபாளத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு, புதிய வரைபடத்துடன், நேபாள எல்லைகள் மற்றும் வரலாற்றை குறிக்கும், பாடப் புத்தகத்தை, கல்வி அமைச்சர், கிரிராஜ் மணி பொக்ரியால், கடந்த வாரம் வெளியிட்டார்.

ஆனால், நேற்று முன்தினம் நடைபெற்ற, நேபாள அமைச்சரவைக் கூட்டத்தில், மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை விநியோகிக்க வேண்டாம் என, முடிவு செய்யப்பட்டது. இது குறித்து, அரசின் செய்தி தொடர்பாளர், ஜனக் ராஜ் ஜோஷி கூறியதாவது:

நேபாளத்தின் பூகோளப் பகுதியை மாற்ற, கல்வி அமைச்சகத்திற்கு அதிகாரமில்லை. மேலும், அந்த புத்தகத்தில் பல தவறுகள் உள்ளன. எல்லைகள் குறித்து, போதிய அனுபவமில்லாத கல்வித் துறை தயாரித்த புத்தகத்தை வெளியிடக் கூடாது என, அரசிடம் தெரிவிக்கப்பட்டது. அதனால், அச்சடித்த புத்தக விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை