கோரிக்கை: கால்வாய் பணியை விரைந்து முடிக்க...பருவ மழைக்குமுன் நடவடிக்கை தேவை

தினமலர்  தினமலர்
கோரிக்கை: கால்வாய் பணியை விரைந்து முடிக்க...பருவ மழைக்குமுன் நடவடிக்கை தேவை

சின்னசேலம்: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் சின்னசேலம் நகர பகுதிகளில் நடைபெற்று வரும், கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு மற்றும் புதிய கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்னசேலம் நகர பகுதிக்குட்பட்ட சேலம் மெயின் ரோடு, மூங்கில்பாடி ரோடு, கூகையூர் ரோடு, விஜயபுரம், கடைவீதி ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.மேலும், இப்பகுதிகளில் வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் அதிகளவில் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் சாலையோரங்களில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டு, அதன் மேல் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.ஒரு சில ஆண்டுகள் மட்டுமே பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பயன்படுத்தி வீசப்படும் பிளாஸ்டிக் கப், பாலித்தீன் கவர் உள்ளிட்ட குப்பைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டு கழிவுநீர் கால்வாயில் விழுந்தன.இதனால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம் ஏற்பட்டது. மழை பெய்தால் நகரம் முழுதும் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும்.இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். மேலும் கழிவுநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் உண்டாகின்றன.இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு விஜயபுரம் பகுதிகளில் உள்ள தெருக்களில் பழைய கால்வாய்களை அகற்றிவிட்டு, புதிதாக 90 லட்சம் ரூபாய் செலவில் கால்வாய் கட்டுமானப் பணி சின்னசேலம் பேரூராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது.

மேலும், சேலம் மெயின் ரோடு சாலை, மூங்கில்பாடி ரோடு, பள்ளிக்கூடத் தெரு ஆகிய பெரும்பான்மையான பகுதிகளில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு உள்ளதால், அதனை சீரமைக்கும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு வாரங்களில் துவங்க உள்ளதால் நகர பகுதியில் ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடித்து, முறையாக கால்வாய்களை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலக்கதை