சிறுவாணி தண்ணீரை வெளியேற்றாதீங்க! கேரள அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் பேச்சு

தினமலர்  தினமலர்
சிறுவாணி தண்ணீரை வெளியேற்றாதீங்க! கேரள அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் பேச்சு

கோவை:சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்துமாறு, கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளை, குடிநீர் வடிகால் வாரியத்தினர் நேற்று நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கேரள வனப்பகுதியில் சிறுவாணி அணை அமைந்திருக்கிறது.
இங்கிருந்து எடுக்கப்படும் நீரே, கோவை மேற்கு பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரம்.இந்த அணையின் மொத்த உயரம் - 50 அடி. ஆனால், பாதுகாப்பு காரணங்களை கூறி, சில ஆண்டுகளாக, 45 அடிக்கே, கேரள அரசு, நீர் தேக்குகிறது. இதன் காரணமாக, கோடை காலங்களில் கோவையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.கடந்த, 20ல் அணை பகுதியில், 175 மி.மீ., மழை பெய்ததால், நீர் மட்டம், 45 அடியானது. நேற்று முன்தினமும் கன மழை தொடர்ந்ததாலும், அருவிகளில் நீர் வரத்து காணப்பட்டதாலும், 65 செ.மீ., உயரத்துக்கு மதகுகளை திறந்து, தண்ணீரை, கேரள அதிகாரிகள் வெளியேற்றினர்.
அதிர்ச்சியடைந்த தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், நேற்று கோழிக்கோடு சென்று, கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளை சந்தித்தனர்.'சிறுவாணி குடிநீரே கோவை மக்களுக்கு குடிநீர் ஆதாரம் என்பதால், அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்க வேண்டும்' என, வலியுறுத்தினர். அதற்கு, 'அணைக்கு நேரில் சென்று, ஆய்வு செய்து, ஆவன செய்கிறோம்' என, அம்மாநில அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.
நேற்று, அணை பகுதியில், 65 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. மழைப்பொழிவு குறைய ஆரம்பித்துள்ளதால், 15 செ.மீ.,க்கு மதகுகளை கீழிறக்கி, 50 செ.மீ., உயரத்துக்கு திறந்து வைத்து, தண்ணீரை வெளியேற்றினர்.

மூலக்கதை