விவசாய திட்ட முறைகேடு: இதுவரை ரூ.67 கோடி பறிமுதல்

தினமலர்  தினமலர்
விவசாய திட்ட முறைகேடு: இதுவரை ரூ.67 கோடி பறிமுதல்

சென்னை : பிரதமரின் விவசாயஉதவித்தொகை முறைகேடு தொடர்பாக, இதுவரை, 67 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.நாடு முழுதும் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும், 6,000 ரூபாய், பிரதமரின் உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், தமிழகத்தில், 45 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களில், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், விவசாயிகள் அல்லாதோர் என, கண்டறியப்பட்டு உள்ளது. 13 மாவட்டங்களில், இதுபோன்ற முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.முறைகேடாக சேர்ந்தவர்களின், வங்கி கணக்குகளில் இருந்து, உதவித்தொகை திரும்ப பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இப்பிரச்னை தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார்விசாரித்து வருகின்றனர்.

இதுவரை, 52 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். வேளாண் துறை சேர்ந்த, 34 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.முறைகேடாக உதவித் தொகை பெற்றவர்களின், வங்கி கணக்குகளில் இருந்து, நேற்று வரை, 67 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.அதிகபட்சமாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 18 கோடி ரூபாய்; விழுப்புரத்தில், 10 கோடி ரூபாய்; திருவண்ணாமலை மற்றும் கடலுார் மாவட்டங்களில், தலா, 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பறிமுதல் நடவடிக்கையை, இம்மாத இறுதிக்குள் முடிக்கும்படி, வேளாண் துறை வாயிலாக, வங்கிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மூலக்கதை