ஹிந்தி தெரியாததால் டாக்டருக்கு கடன் மறுப்பு: வங்கி மேலாளர் மாற்றம்

தினமலர்  தினமலர்
ஹிந்தி தெரியாததால் டாக்டருக்கு கடன் மறுப்பு: வங்கி மேலாளர் மாற்றம்

பெரம்பலுார் : டாக்டருக்கு ஹிந்தி தெரியாததால், கடன் தர மறுத்த வங்கி மேலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அரியலுார், யுத்தப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன், 77; ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில், தலைமை டாக்டராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். இவர், 15 ஆண்டுகளாக, தான் வாடிக்கையாளராக உள்ள கங்கைகொண்ட சோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் கேட்டு, சில நாட்களுக்கு முன் விண்ணப்பித்தார்.

வங்கியின் சீனியர் மேனேஜராக இருந்த, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால், 'உங்களுக்கு ஹிந்தி தெரியாதா? எனக்கு தமிழ் தெரியாது. எனவே, கடன் தர இயலாது' என கூறியதாக தெரிகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான பாலசுப்ரமணியன், வங்கி மேலாளரிடம் விளக்கம் கேட்டு, 12ம் தேதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.


இது, பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, விஷால், திருச்சி மண்டல அலுவலக சீனியர் மேனேஜராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். முன்னதாக, வங்கி மேலாளரை கண்டித்து, தி.மு.க., சார்பில், மாவட்டச் செயலர் சிவசங்கர் தலைமையில், வங்கி முன் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மூலக்கதை