இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 1.59 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 80.86 சதவீதமாக உயர்வு

தினமலர்  தினமலர்
இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 1.59 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 80.86 சதவீதமாக உயர்வு

புதுடில்லி : இந்தியாவில் கொரோனா தொற்றின் இறப்பு விகிதம் 1.59 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 80.86 சதவீதமாக அதிகரித்ததாகவும் மத்திய சுகாதாரதுறை தெரிவித்தது.


இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுவோர் மற்றும் பலியாவோரின் எண்ணிக்கை குறைந்து மீட்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரதுறை மற்றும் குடும்ப நலத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தற்போது நாட்டின் கொரோனா இறப்பு விகிதம் (CFR) 1.59 சதவீதமாக குறைந்துள்ளது. நோய் பாதிப்புகளை குறைக்க தொடர்ந்து நடத்தப்படும் கணக்கெடுப்பு, பரிசோதனை, அணுகுமுறை அடிப்படையிலான மருத்துவ பரிசோதனைகள், வீட்டு தனிமை ஆகியவற்றின் மூலமாகவும் கொரோனா மீட்பு விகிதம் உயர்ந்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், (செப்.,21) இந்தியா, ஒரு நாளில் அதிக மீட்டெடுப்புகளை கண்டதாக மத்திய சுகாதாரதுறை இன்று (செப்.,22) தெரிவித்தது. கொரோனா பாதிப்புகளில் இருந்து நேற்று ஒரே நாளில், 1,01,468 பேர் மீட்கப்பட்டனர். இதனால் நாட்டில் தொற்று பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,97,867 ஆக உயர்ந்தது. நாட்டின் கொரோனா மீட்பு விகிதம் 80.86 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் சிறந்த வழிகாட்டுதலின் கீழ், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், கடுமையான பாதிப்புகளை திறம்பட நிர்வகிப்பதன் மூலமாகவும் , சுகாதார பணியாளர்களால் பாதிப்பு அதிகமான நபரை பராமரிப்பதன் மூலமாகவும், நாடு முழுவதும் (CFR -Case Fertility Rate) குறைவதற்கான வழியாகும்.


கடந்த 3 நாட்களில் இந்தியா மிக அதிக ஒற்றை நாள் மீட்டெடுப்புகளை பதிவு செய்துள்ளது. ஒவ்வொரு நாளும் 90,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டு, மருத்துவமனைகள் / வீட்டு தனிமைப்படுத்துதலில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 75,083 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55 லட்சத்தை கடந்து, 55, 62,664 ஆக உள்ளது. நேற்று ஒரு நாளில், 1,053 பேர் பலியாகினர். கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 88,935 ஆக உள்ளது. இதுவரை 9,75,861 பேர் சிகிச்சையில் உள்ளனர். அத்துடன் கொரோனா பாதிப்பு விகிதம் 8.02 சதவீதமாக உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ( ICMR ) தரவுபடி, 6,53,25,779 கொரோனா மாதிரிகள் செப்., 21 வரை சோதனை செய்யப்பட்டன. அவற்றில் 9,33,185 மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்டன. இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று கிட்டத்தட்ட 20 சதவிகிதம் குறைந்துவிட்டது.

மூலக்கதை