சாம்சன், ஸ்மித், ஆர்ச்சர் அதிரடி சூப்பர் கிங்சுக்கு 217 ரன் இலக்கு

தினகரன்  தினகரன்
சாம்சன், ஸ்மித், ஆர்ச்சர் அதிரடி சூப்பர் கிங்சுக்கு 217 ரன் இலக்கு

ஷார்ஜா: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 217 ரன் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி முதலில் பந்துவீச முடிவு செய்தார், ராஜஸ்தான் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், கேப்டன் ஸ்மித் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 6 ரன் மட்டுமே எடுத்து தீபக் சாஹர் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.சிக்சர் மழை: அடுத்து ஸ்மித்துடன் சஞ்சு சாம்சன் இணைந்தார். வேகப் பந்துவீச்சாளர்களை சற்று எச்சரிக்கையுடன் அணுகிய இவர்கள் இருவரும், சென்னை அணியின் சுழற்பந்துவீச்சை சிக்சர்களாகப் பறக்கவிட்டு சிதறடித்தனர். குறிப்பாக சாம்சனின் ஆட்டத்தில் அனல் பறந்தது. சாவ்லா வீசிய 8வது ஓவரின் முதல் 2 பந்துகளையும் இமாலய சிக்சராகத் தூக்கிய சாம்சன், அடுத்த பந்தில் 1 ரன் எடுத்து தனது அரை சதத்தை நிறைவு செய்தார் (19 பந்து, 1 பவுண்டரி, 6 சிக்சர்). அந்த ஓவரில் மட்டும் 28 ரன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. சாம்சனின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமல் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் விழி பிதுங்கினர்.ஸ்மித் - சாம்சன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 56 பந்தில் 121 ரன் சேர்த்து மிரட்டியது. இதே வேகத்தில் போனால் ராயல்ஸ் 250 ரன் குவித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என நினைத்த வேளையில், சாம்சன் 74 ரன் (32 பந்து, 1 பவுண்டரி, 9 சிக்சர்) விளாசி என்ஜிடி வேகத்தில் சாஹர் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த மில்லர் ரன் ஏதும் எடுக்காமல் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டாக, சிஎஸ்கே வீரர்கள் உற்சாகமடைந்தனர். 35 பந்தில் அரை சதம் அடித்த ஸ்மித், எதிர் முனையில் அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் அதிரடியை தொடர முடியாமல் தடுமாறினார். சென்னை அணி முனைப்புடன் தாக்குதலை தீவிரப்படுத்த... உத்தப்பா 5 ரன் எடுத்து சாவ்லா சுழலில் டு பிளெஸ்ஸி வசம் பிடிபட்டார். திவாதியா 10 ரன், பராக் 6 ரன், ஸ்மித் 69 ரன் (47 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து சாம் கரன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ராயல்ஸ் 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன் எடுத்திருந்தது. எப்படியும் 200 ரன்னுக்குள் கட்டுப்படுத்திவிடலாம் என சிஎஸ்கே கணக்கு போட்ட நிலையில், 20வது ஓவரை லுங்கி என்ஜிடி வீசினார்.ஆச்சரியப்படுத்திய ஆர்ச்சர்: அந்த ஓவரில் ஆர்ச்சர் தொடர்ச்சியாக 4 சிக்சர்களை (2 நோ பால், பிரீ ஹிட்ஸ்) பறக்கவிட ராயல்ஸ் ஸ்கோர் எக்கச்சக்கமாக எகிறியது. கடைசி ஓவரில் மட்டும் ராயல்சுக்கு 30 ரன் கிடைக்க, அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன் குவித்து அசத்தியது. டாம் கரன் 10 ரன், ஆர்ச்சர் 27 ரன்னுடன் (8 பந்து, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை பந்துவீச்சில் சாம் கரன் 3, சாஹர், என்ஜிடி, சாவ்லா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 217 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. எம்.விஜய், வாட்சன் இருவரும் துரத்தலை தொடங்கினர்.

மூலக்கதை