மூலப்பொருட்களின் விலையை 20% உயர்த்தியது சீனா அத்தியாவசிய மருந்து விலை உயரும் அபாயம்: ‘சுயசார்பு இந்தியா’வுக்கு வந்தது சோதனை

தினகரன்  தினகரன்
மூலப்பொருட்களின் விலையை 20% உயர்த்தியது சீனா அத்தியாவசிய மருந்து விலை உயரும் அபாயம்: ‘சுயசார்பு இந்தியா’வுக்கு வந்தது சோதனை

புதுடெல்லி: மருந்து தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் விலையை சீனா திடீரென உயர்த்தியுள்ளது. இதனால், இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகள் விலை விரைவில் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மருந்து உற்பத்தியில் இந்தியா முக்கிய பங்களிப்பு அளித்தாலும், இதற்கு தேவையான மூலப்பொருட்களுக்கு சீனாவையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இதனால்தான், சீனாவில் கொரோனா பரவல் தொடங்கியபோது பாரசிட்டமால் உட்பட பெரும்பாலான மருந்துகளுக்கு இந்தியாவில் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், அத்தியாவசிய மருந்து மூலப்பொருட்கள் விலையை சீனா திடீரென 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. நோய் நுண்ணுயிர்க்கொல்லி (ஆன்டிபயாட்டிக் ), ஊக்க மருந்துகள் (ஸ்டிராய்டு) உள்ளிட்டவை இதில் அடங்கும்.முக்கிய மருந்து மூலப்பொருட்கள் தேவைக்கு சுமார் 70 சதவீதம் முதல் 80 சதவீதம் சீனாவில் இருந்துதான் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக, செபலோஸ்பரின்ஸ், அசித்ரோமைசின், பென்சிலின் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்து மூலப்பொருட்களுக்கு சீனாவில் இருந்து 90 சதவீத இறக்குமதியை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. சீன நிறுவனங்களின் இந்த நடவடிக்கையால், இந்தியாவில் மருந்து உற்பத்தி செலவு அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இதனால் உள்நாட்டு மருந்து நிறுவனங்கள் மருந்து விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, அடுத்த சில மாதங்களில் அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தின்படி, இந்தியாவை உற்பத்தி மையமாக்க மத்திய அரசு முனைப்புக்காட்டி வருகிறது. இதன்படி, உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு சலுகை திட்டத்தில், பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்துள்ள 50க்கும் மேற்பட்ட முக்கிய மருந்து மூலப்பொருட்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய மத்திய அரசு அறிவித்தது. ஆனால், சீனாவின் விலையை திடீரென உயர்த்தியதால் இந்த ஆண்டில் இந்த திட்டம் செயல்முறைக்கு வருவது சாத்தியமில்லை. இப்படி ஒரு சிக்கலான சூழ்நிலையில் இந்த திட்டத்தில் முதலீடுகள் மேற்கொள்ளப்படாவிட்டால் மருந்து நிறுவனங்கள் நிலை மோசமாகிவிடும். எனவே, மூலப்பொருட்கள் விலை உயர்வு, சுயசார்பு திட்டத்துக்கு சோதனை வைத்ததுபோல் அமைந்து விட்டது என மருத்துவ நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மூலக்கதை