வேளாண் மசோதாக்கள் விவசாயத்துறைக்கு அவசியம்..கண்ணியம் தவறிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை சரியானதே!: பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

தினகரன்  தினகரன்
வேளாண் மசோதாக்கள் விவசாயத்துறைக்கு அவசியம்..கண்ணியம் தவறிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை சரியானதே!: பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

பாட்னா: வேளாண் மசோதாக்களுக்கு எதிராக அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் மாநிலங்களவையில் கண்ணியம் தவறி விட்டதாகவும், அவர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை சரியானதே என்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். விவசாய மசோதாக்கள் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்த ராஜ்யசபாவில் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்ட 8 பேர் நடப்பு கூட்டத்தொடரின் எஞ்சிய அலுவல்களில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். தொடர்ந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்பிக்களும் உடனடியாக அவையிலிருந்து வெளியேற வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார். இது தொடர்பாக 8 எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், வேளாண் மசோதாக்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த பீகார் முதலமைச்சர் திரு. நிதிஷ்குமார் வேளாண் மசோதாக்கள் விவசாயத்துறைக்கு அவசியம் என்று கூறினார். மாநிலங்களவையில் அதனை நிறைவேற்றிய போது அவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்ணிய குறைவாக நடந்துக் கொண்டதாகவும், இது நாடாளுமன்றத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளதாகவும் நிதிஷ்குமார் கூறினார். அவை தலைவர் இருக்கைக்கு முன் சென்று எதிர்கட்சி எம்.பி.க்கள் ஆவணத்தை கிழிப்பது உள்ளிட்ட கன்னியக்குறைவான வேலைகளில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது என்றும், அவர்களின் செயல்கள் தவறானவை, அவர்கள் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கை சரியானதே என்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறினார்.  

மூலக்கதை