சத்தீஸ்கரில் மத்திய பாதுகாப்புப் படையினர் வாகனம் ஆற்றில்கவிழ்ந்து விபத்து!.. தேடுதல் வேட்டை நடத்திவிட்டு திரும்பியபோது நேரிட்ட விபரீதம்!!!

தினகரன்  தினகரன்
சத்தீஸ்கரில் மத்திய பாதுகாப்புப் படையினர் வாகனம் ஆற்றில்கவிழ்ந்து விபத்து!.. தேடுதல் வேட்டை நடத்திவிட்டு திரும்பியபோது நேரிட்ட விபரீதம்!!!

ராய்ப்பூர்:  சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டு தேடுதல்வேட்டை நடத்திவிட்டு திரும்பிய மத்திய பாதுகாப்புப் படை வாகனம் நீரில் அடித்துச்செல்லப்பட்ட பதைபதைக்கும் காட்சி வெளியாகி இருக்கிறது. மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திவரும் நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்டுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலைகள் மற்றும் காடுகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.  குறிப்பாக சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட், மணிப்பூர், மகாராஷ்டிரா உள்ளிட்ட  சில மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் பொதுமக்கள், போலீசார் மீது அவ்வப்போது பயங்கர தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.  இதனால் இந்த குழுவினரை வேட்டையாட மாநில சிறப்பு தனிப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் தெலுங்கானா-சத்தீஸ்கர் மாநில எல்லையில் உள்ள சுக்மா மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் பயங்கர ஆயுதங்களுடன் ஆற்றை கடந்துசெல்லும் காட்சிகள் பதிவாகின. இதன்தொடர்ச்சியாக மாவோயிஸ்டுகளை தேடுதல்வேட்டை நடத்திவிட்டு மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் திரும்பினர். அப்போது சுக்மா மாவட்டத்தில் உள்ள பாலத்தை கடக்கும்போது அவர்கள் பயணித்த பேருந்து திடீரென வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. தொடர்ந்து, தரை பாலத்தை கடக்க முயன்ற பாதுகாப்பு படை வீரர்கள் பயணித்த வாகனம் நீரில் இழுத்து செல்லப்பட்டது. இதையடுத்து பேருந்தில் பயணித்த பாதுகாப்பு வீரர்கள் பேருந்தின் ஜன்னல் வழியாக வெளியேறினர். கடந்த சில நாட்களாக சத்தீஸ்கர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றினை கடக்கும் மக்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

மூலக்கதை