துபாயில் தடையை மீறி 'பார்ட்டி' நடத்திய நடிகை கைது

தினமலர்  தினமலர்
துபாயில் தடையை மீறி பார்ட்டி நடத்திய நடிகை கைது

துபாய் : கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி, இரண்டு ஓட்டல்களில், பிறந்த நாள் விருந்து நிகழ்ச்சி நடத்திய நடிகையை, துபாய் போலீசார் கைது செய்தனர்.

மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.பொது இடங்களில், முக கவசம் அணியாதவர்கள், தனிமனித இடைவெளி பின்பற்றாதவர்களுக்கு, 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.ஓட்டல்கள் மற்றும் வீடுகளில், அதிக எண்ணிக்கையிலான நபர்களை அழைத்து, விருந்து நிகழ்ச்சி உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.மீறுபவர்களுக்கு, இரண்டு லட்சம் ரூபாயும், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாயும், அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், வட ஆப்பிரிக்க நாடான, மொராக்காவை சேர்ந்த, எம்.ஹெச்., என்ற நடிகை, துபாயில் உள்ள இரண்டு ஓட்டல்களில், தன் பிறந்த நாள் விருந்து நிகழ்ச்சியை, சமீபத்தில் விமரிசையாக கொண்டாடினார். இதில், ஏராளமானோர் பங்கேற்றனர். அந்த விருந்தில், தனி மனித இடைவெளி உள்ளிட்ட, கொரோனா தடுப்பு விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.இந்நிகழ்ச்சியின், 'வீடியோ' காட்சிகளை, 'ஸ்நாப்சாட்' எனப்படும், சமூக ஊடகத்தில், அந்த நடிகை பகிர்ந்தார்.இதை பார்த்த துபாய் போலீசார், அதிர்ச்சி அடைந்தனர். அரசின் விதிமுறைகளை மதிக்காமல், விருந்து நிகழ்ச்சி நடத்திய நடிகையை, கைது செய்தனர்.

மூலக்கதை