மத்திய அரசின் கலாச்சாரக் குழுவில் தமிழ் மொழிக்கு பிரதிநிதித்துவம் தரவில்லை என திருச்சி சிவாவின் முறையீட்டிற்கு வெங்கையா நாயுடு பாராட்டு!!

தினகரன்  தினகரன்
மத்திய அரசின் கலாச்சாரக் குழுவில் தமிழ் மொழிக்கு பிரதிநிதித்துவம் தரவில்லை என திருச்சி சிவாவின் முறையீட்டிற்கு வெங்கையா நாயுடு பாராட்டு!!

டெல்லி : இந்தியாவின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவில் தமிழ் அறிஞர்களுக்கு பிரதிநிதித்துவம் தரவில்லை என்பதை திமுக எம்.பி. நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். மாநிலங்களவையில் பேசிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா, இந்தியாவின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு நடத்த 60 உறுப்பினர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சார அமைச்சர் அறிவித்து இருந்தை அவையில் குறிப்பிட்டார். இக்குழுவில் சமஸ்கிருதம் பேராசிரியர்கள் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய அவர், உலகத்தின் பழம் பெரும் மொழிகளில் ஒன்றான தமிழுக்கு மத்திய அரசின் கலாச்சாரக் குழுவில்  பிரதிநிதித்துவம் தரவில்லை என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்து பேசிய மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, உரிய நேரத்தில் இந்த பிரச்னையை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்காக திருச்சி சிவாவிற்கு பாராட்டு தெரிவித்தார். இதையடுத்து மத்திய அரசின் கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழ் மொழியின் பிரதிநிதித்துவம் புறக்கணிக்கப்பட்டு இருப்பது குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு அவை அலுவலர்களுக்கு வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார். 

மூலக்கதை