படிக்கல் கலக்கல்... பெங்களூரு வெற்றி * சரிந்தது வார்னர் அணி | செப்டம்பர் 21, 2020

தினமலர்  தினமலர்
படிக்கல் கலக்கல்... பெங்களூரு வெற்றி * சரிந்தது வார்னர் அணி | செப்டம்பர் 21, 2020

துபாய்: ஐ.பி.எல்., தொடரை பெங்களூரு அணி வெற்றியுடன் துவக்கியது. தேவ்தத் படிக்கல், டிவிலியர்ஸ் அரைசதம் அடிக்க, 10 ரன்கள் வித்தியாசத்தில், ஐதராபாத்தை வீழ்த்தியது. 

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. துபாயில் நேற்று நடந்த லீக் போட்டியில் கோஹ்லியின் பெங்களூரு அணி, வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணியை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர், பவுலிங் தேர்வு செய்தார். 

பெங்களூரு அணியில் தேவ்தத் படிக்கல் அறிமுக வாய்ப்பு பெற்றார். 

நல்ல துவக்கம்

பெங்களூரு அணிக்கு தேவ்தத், பின்ச் துவக்கம் கொடுத்தனர். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் 2 ரன் மட்டும் எடுக்கப்பட்டன. தொடர்ந்து நடராஜனின் முதல் ஓவரில் மூன்று பவுண்டரி அடித்து மிரட்டினார் தேவ்தத். 

மறுபக்கம் விஜய் சங்கர் பந்துகளை சிக்சருக்கு அனுப்பி அசத்தினார் பின்ச். பெங்களூரு அணி 5.2 ஓவரில் 50 ரன்களை எட்டியது. முதல் விக்கெட்டுக்கு 90 ரன் எடுத்த போது, விஜய் சங்கர் பந்தில் தேவ்தத் (56) போல்டானார். பின்ச் (29) அடுத்த சில நிமிடத்தில் கிளம்பினார். 

டிவிலியர்ஸ் அரைசதம்

பின் கேப்டன் கோஹ்லி, அனுபவ டிவிலியர்ஸ் இணைந்தனர். கோஹ்லி, 14 ரன்னுக்கு, தமிழக வீரர் நடராஜன் ‘வேகத்தில்’ வீழ்ந்தார். அரைசதம் எட்டிய டிவிலியர்ஸ் (51) ரன் அவுட்டானார். கடைசியில் துபே (7) ரன் அவுட்டானார். பெங்களூரு அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. பிலிப் (1) அவுட்டாகாமல் இருந்தார்.

பேர்ஸ்டோவ் ஆறுதல்

ஐதராபாத் அணிக்கு வார்னர், பேர்ஸ்டோவ் ஜோடி துவக்கம் கொடுத்தது. வார்னர் 6 ரன் எடுத்தார். மணிஷ் பாண்டே (34) ஆறுதல் தந்தார். சகால் தனது 4வது ஓவரில் பேர்ஸ்டோவ் (61), விஜய் சங்கரை (0) அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாக்க, போட்டி பெங்களூருவுக்கு சாதகமாக திரும்பியது. பிரியம் கார்க் (12), அபிஷேக் (7), புவனேஷ்வர் (0) விரைவில் திரும்பினர். ரஷித் கான் (6), மார்ஷ் (0), சந்தீப் (9) வரிசையாக கிளம்ப, ஐதராபாத் அணி 19.4 ஓவரில் 153 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடராஜன் (3) அவுட்டாகாமல் இருந்தார். சகால் 3 விக்கெட் வீழ்த்தினார்.

 

மிட்சல் மார்ஷ் காயம்

ஐதராபாத் அணியின் மிட்சல் மார்ஷ், நேற்று தனது முதல் ஓவரை வீசினார். 2வது பந்து வீசிய போது வலது கணுக்கால் திருகியது. ‘பிசியோ’ எடுத்துக் கொண்டு மீண்டும் 2 பந்துகள் வீசினார். பின் தொடர்ந்து செயல்பட முடியாத நிலையில் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

 

8

ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச். ஐ.பி.எல்., தொடரில் 2010ல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். அடுத்து டில்லி (2011–12), புனே (2013), ஐதராபாத் (2014), மும்பை (2015), குஜராத் (2016–17) அணிகளுக்காக விளையாடினார். 2018ல் பஞ்சாப்பில் இணைந்த இவர், இம்முறை பெங்களூருவில் களமிறங்கினார். 10 ஆண்டுகளில் இவர் 8வது அணிக்காக விளையாடுகிறார். 

 

கேரள வீரர்

ஐ.பி.எல்., ஏலத்தில் இந்திய அணிக்காக விளையாடாத போதும், பெரிய எதிர்பார்ப்புடன் வாங்கப்பட்டவர்கள் தேவ்தத் படிக்கல் 20, ருதுராஜ் 23. கேரளாவை சேர்ந்த தேவ்தத், விஜய் ஹசாரே, சையது முஷ்தாக் அலி தொடரில் அதிக ஸ்கோர் எடுத்தார். 

நேற்று பெங்களூரு அணியில் அறிமுக வாய்ப்பு பெற்ற இவர் 42 பந்தில் 56 ரன்கள் எடுத்து தன்மீதான நம்பிக்கையை காப்பாற்றினார்.

 

முதல் அரைசதம்

அறிமுக போட்டியில் அரைசதம் அடிப்பது தேவ்தத் படிக்கல் வழக்கம் போல. முதல் தரம் (2018ல் 7, 77), ‘லிஸ்ட் ஏ’ (58, 2019), உள்ளூர் ‘டுவென்டி–20’ (53, 2019) மூன்று அறிமுக போட்டியிலும் அரைசதம் விளாசினார். நேற்று ஐ.பி.எல்., அரங்கிலும் அறிமுக அரைசதம் (56) அடித்து அசத்தினார்.

* ஐ.பி.எல்., அரங்கில் பெங்களூரு அணிக்காக அறிமுக போட்டியில் அசைதம் எட்டிய ஐந்தாவது வீரர் ஆனார் தேவ்தத் (56). கெய்ல் (2011, 102 ரன்), டிவிலியர்ஸ் (2011, 54), யுவராஜ் சிங் ((2014, 52), கோஸ்வாமி (2008, 52) இதற்கு முன் இதுபோல அரைசதம் அடித்தனர். 

மூலக்கதை