பஞ்சாப் ‘பஞ்சாயத்து’ * ஒரு ரன் மறுத்தாரா அம்பயர் | செப்டம்பர் 21, 2020

தினமலர்  தினமலர்
பஞ்சாப் ‘பஞ்சாயத்து’ * ஒரு ரன் மறுத்தாரா அம்பயர் | செப்டம்பர் 21, 2020

துபாய்: அம்பயர் தவறு காரணமாக தங்களது வெற்றி பறிபோனதாக பஞ்சாப் அணி புகார் கூறியுள்ளது. 

பஞ்சாப், டில்லி அணிகள் மோதிய ஐ.பி.எல்., லீக் போட்டி துபாயில் நடந்தது. டில்லி (157/8) இலக்கைத் துரத்திய பஞ்சாப் அணி வெற்றிக்கு கடைசி 12 பந்தில் 25 ரன் தேவைப்பட்டது. 19வது ஓவரை ரபாடா வீசினார். இதன் 3வது பந்தில் (18.3வது) மயங்க் அகர்வால், 2 ரன் எடுத்தார். இவருடன் களத்தில் இருந்த ஜோர்டன், முதல் ரன் எடுக்க ஓடிய போது, கிரீசில் பேட்டினை வைக்கவில்லை என்று கூறிய அனுபவம் இல்லாத அம்பயர் நிதின் மேனன் (இந்தியா), ஒரு ரன் மட்டும் தந்தார். ஆனால் ‘டிவி’ ரீப்ளேயில் ஜோர்டன் பேட்டினை கிரீசில் முறையாக வைத்தது தெரிந்தது.

இதை சரியாக கவனித்திருந்தால், பஞ்சாப் அணி வெற்றி பெற்றிருக்கும். சூப்பர் ஓவர் முறையும் வந்திருக்காது. அம்பயர் தவறு காரணமாக (பஞ்சாப் அணி 20 ஓவரில் 157/8 ரன்) போட்டி சமன் ஆனது. சூப்பர் ஓவரில் டில்லி வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணி சக உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா கூறியது:

கொரோனா காலத்தில் ஆர்வத்துடன் எமிரேட்ஸ் வந்து, 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு, 5 கொரோனா சோதனையில் தேறி, மகிழ்ச்சியுடன் போட்டியை காண வந்தேன். கடைசியில் ஒரு ரன் பிரச்னை பெரிதும் பாதித்து விட்டது. 

அம்பயர் தவறால் தோற்க நேர்ந்தது. தொழில்நுட்பத்தை ஏன் பயன்படுத்தவில்லை? ஒவ்வொரு ஆண்டும் இப்படி தவறு நடக்கக் கூடாது. மீண்டும் நடக்காமல் இருக்க, பி.சி.சி.ஐ., உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

 

அம்பயர் ‘ஆட்ட நாயகன்’

இந்திய அணி முன்னாள் வீரர் சேவக் கூறுகையில்,‘‘ஆட்டநாயகன் விருதுக்கான வீரர் தேர்வு செய்யப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு ரன்னை குறைவாக வழங்கிய அம்பயர் தான் ஆட்ட நாயகன். ஏனெனில் அந்த ஒரு ரன் தான் ஒட்டுமொத்த குழப்பத்துக்கும் காரணம்,’’ என்றார்.

 

விதி மாறுமா

டில்லி அணிக்கு எதிராக ஒரு ரன் குறைக்கப் பட்டது குறித்து பஞ்சாப் அணி நிர்வாகம் சார்பில், ‘மேட்ச் ரெப்ரி’ ஸ்ரீநாத்திடம் புகார் தரப்பட்டது. பஞ்சாப் தலைமை செயல் அதிகாரி சதிஷ் மேனன் கூறுகையில்,‘‘மனித தவறுகள் சகஜம் தான். இதுபோன்ற உலகத்தரம் வாய்ந்த தொடரில் இதற்கு இடம் தரக் கூடாது. இதனால் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படலாம். விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,’’ என்றார்.

மூலக்கதை