சார்ஜாவில் சாதிக்குமா சென்னை *ராஜஸ்தானுடன் மோதல் | செப்டம்பர் 21, 2020

தினமலர்  தினமலர்
சார்ஜாவில் சாதிக்குமா சென்னை *ராஜஸ்தானுடன் மோதல் | செப்டம்பர் 21, 2020

சார்ஜா: ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி தனது இரண்டாவது போட்டியில் இன்று ராஜஸ்தானை சந்திக்கிறது. இதில் சாதித்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய காத்திருக்கிறது.

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. இன்று சார்ஜாவில் நடக்கும் போட்டியில் தோனியின் சென்னை அணி, ஸ்டீவ் ஸ்மித்தின் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது.

கடந்த சீசன் பைனலில் மும்பையிடம் அடைந்த தோல்விக்கு, முதல் போட்டியில் மும்பையை வென்று உற்சாகத்துடன் தொடரைத் துவக்கியது. துவக்க வீரர்கள் வாட்சன், முரளி விஜய் இருவரும் இன்று மீண்டு வர முயற்சிக்கலாம்.

‘மிடில் ஆர்டரில்’ அனுபவ டுபிளசி, அதிரடி அம்பதி ராயுடு இணைந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றது இன்றும் தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இளம் வீரர் சாம் கரான், பேட்டிங், பவுலிங்கில் கலக்குகிறார். பிராவோ காயம் சரியாகாததால் இன்றும் களமிறங்க மாட்டார். தோனி விக்கெட் கீப்பிங்கில் வழக்கம் போல மிரட்டுகிறார்.

சாவ்லா பலமா

ஐ.பி.எல்., தொடரில் வெற்றிகரமான பவுலர் ‘சுழல்’ பியுஸ் சாவ்லா. இவர் சென்னை அணியில் இடம் பிடித்தது பலம் தான். வேகத்தில் தீபக் சகார் காயத்தில் இருந்து மீள வில்லை எனில் ஷர்துல் தாகூர் சேர்க்கப்படுவார். லுங்கிடியும் நம்பிக்கை தருகிறார்.

ராஜஸ்தான் அணி ‘டாப் ஆர்டர்’ பேட்டிங்கில் பெரிதும் எதிர்பார்த்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், இன்று பங்கேற்பது அணிக்கு நம்பிக்கை தருகிறது. ஸ்டோக்ஸ் இன்னும் எமிரேட்ஸ் வரவில்லை. பட்லர் தனிமைப்படுத்தலில் இருந்து மீளவில்லை.

உத்தப்பா, சஞ்சு சாம்சன், உனத் கட், வருண் ஆரோனும் தங்கள் மீதான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியது இல்லை. வேறு வழியில்லாத நிலையில் டேவிட் மில்லர், இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர், ஆன்ட்ரூ டை என ஒரு சில வீரர்களை நம்பி களமிறங்குகிறது.

 

மீண்டார் ருதுராஜ்

சென்னை வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 23. இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். மும்பை அணிக்கு எதிராக முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. தற்போது அடுத்தடுத்த இரு சோதனையில் தேறியதை அடுத்து, சென்னை வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட அனுமதி கிடைத்தது.

 

14

இரு அணிகளும் 22 போட்டிகளில் மோதின. இதில் சென்னை 14, ராஜஸ்தான் 8ல் வென்றன.

* கடந்த சீசனில் இரு போட்டிகளிலும் சென்னை வென்றது.

* 2014ல் எமிரேட்சில், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் (துபாய்) சென்னை 7 ரன்னில் வென்றது.

மூலக்கதை