படிக்கல், டி வில்லியர்ஸ் அரைசதம் விளாசல் ஐதராபாத்தை வீழ்த்தியது ஆர்சிபி

தினகரன்  தினகரன்
படிக்கல், டி வில்லியர்ஸ் அரைசதம் விளாசல் ஐதராபாத்தை வீழ்த்தியது ஆர்சிபி

துபாய்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி போராடி 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் பந்துவீசியது. தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் இருவரும் ஆர்சிபி இன்னிங்சை தொடங்கினர். பிஞ்ச் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியாக விளையாடிய அறிமுக வீரர் படிக்கல் (20 வயது) பவுண்டரியாக விளாசித் தள்ளினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 11 ஓவரில் 90 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. 36 பந்தில் அரை சதம் அடித்த படிக்கல் 56 ரன் (42 பந்து, 8 பவுண்டரி) விளாசி விஜய் ஷங்கர் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். ஆரோன் பிஞ்ச் 29 ரன் எடுத்து அபிஷேக் பந்துவீச்சில் வெளியேற, ஆர்சிபி 11.1 ஓவரில் 90/2 என திடீர் சரிவை சந்தித்தது. இந்த நிலையில், கேப்டன் கோஹ்லி - டி வில்லியர்ஸ் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். கோஹ்லி 14 ரன் எடுத்து (13 பந்து) நடராஜன் வேகத்தில் ரஷித் கான் வசம் பிடிபட்டார். கடைசி கட்டத்தில் டி வில்லியர்ஸ் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட, ஆர்சிபி ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. டி வில்லியர்ஸ் 51 ரன் (30 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ஷிவம் துபே 7 ரன் எடுத்து ரன் அவுட்டாக, ஆர்சிபி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன் குவித்தது. ஜோஷ் பிலிப் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 164 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் களமிறங்கியது. கேப்டன் வார்னர், பேர்ஸ்டோ இருவரும் துரத்தலை தொடங்கினர். வார்னர் 6 ரன் மட்டுமே எடுத்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். இதைத் தொடர்ந்து, பாண்டே களமிறங்கினார். இதில் பேர்ஸ்டோ 43 பந்துகளில், 6 பவுண்டரி, 2 சிக்சர் உடன் 61 ரன்கள் குவித்தார். பாண்டேவும் 33 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்சர் உள்பட 34 ரன்கள் எடுத்தார். அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன் களில் ஆட்டம் இழந்தனர். இதனால் 19.4 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்து ஐதராபாத் அணி தோல்வியை தழுவியது.

மூலக்கதை