மாநிலங்களவையில் ஆவணப் புத்தகம் கிழிப்பு, ரகளை; 8 எம்பிக்கள் சஸ்பெண்ட்: ஒரு வாரத்திற்கு கூட்டத் தொடரில் பங்கேற்க முடியாது

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாநிலங்களவையில் ஆவணப் புத்தகம் கிழிப்பு, ரகளை; 8 எம்பிக்கள் சஸ்பெண்ட்: ஒரு வாரத்திற்கு கூட்டத் தொடரில் பங்கேற்க முடியாது

புதுடெல்லி: மாநிலங்களவையில் ஆவணப் புத்தகம் கிழிப்பு மற்றும் ரகளையில் ஈடுபட்டதால், எதிர்க்கட்சி எம்பிக்கள் 8 பேர் இன்று காலை திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இவர்கள் ஒரு வாரத்திற்கு கூட்டத் தொடரில் பங்கேற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே ‘விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தக மற்றும் வணிக (ஊக்குவித்தல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல்) மசோதா -2020’, ‘விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பளித்தல்) விலை உறுதிப்பாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா-2020’ ஆகியவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. ஆனால், வாக்கெடுப்பு நடத்தி மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்று எம்பிக்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

ஆனால் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.

அவையை நடத்திய துணைத்தலைவர் ஹரிவன்ஷின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்கள் எழுப்பினர்.

பேரவை விதிகள் அடங்கிய ஆவணப் புத்தகத்தையும் கிழித்து எறிந்தனர்.

இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த அமளிக்கு இடையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆனால், அவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட முறையை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் கையாண்ட விதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, ஆம்ஆத்மி உள்ளிட்ட 12 கட்சிகள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளன. இதுகுறித்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓபிரையன் கூறுகையில், ‘நாடாளுமன்ற அமைப்பையும், ஜனநாயகத்தையும் மத்திய அரசு கொலை செய்கிறது.

வேளாண் மசோதாக்கள் தொடர்பாக வாக்களிப்பதற்கு எதிர்க்கட்சிகளை அரசு அனுமதிக்கவில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு இது துயரமான நாளாகும்.

வேளாண் மசோதாக்களை நிறைவேற்றத் தேவையான ஆதரவு இல்லை என்று தெரிந்த காரணத்தால் அதன் மீதான வாக்கெடுப்புக்கு மத்திய அரசு அனுமதிக்கவில்லை. அரசமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட எம்பிக்களின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

இந்நிலையில் இன்று மாநிலங்களவை கூடியதும் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில், ‘துணைத் தலைவர் ஹரிவன்ஷுக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வருதல் தொடர்பாக பேச அனுமதிக்க முடியாது.

இதுபோன்ற தீர்மானத்திற்கு 14 நாட்கள் முன் அறிவிப்பு காலம் தேவை.

நேற்று ராஜ்யசபாவுக்கு ஒரு மோசமான நாள். ஞாயிற்றுக்கிழமை நடந்த விஷயங்கள் வேதனை அளிக்கிறது.

கொரோனா நெறிமுறைகளைப் பற்றி கவலைப்படாமல், அவையில் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்டவிதம், நாடாளுமன்றத்தின் பிம்பத்தை கெடுத்தது. பாதுகாவலர்கள் சரியான நேரத்தில் சென்றிருக்காவிட்டால், துணைத் தலைவருக்கு என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்து கவலைப்படுகிறேன்’ என்றார்.

இந்நிலையில், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷிடம் விதிமுறை மீறி நடந்து கொண்டதாக கூறி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்பி டெரிக் ஓ பிரையன், அதே கட்சியைச் சேர்ந்த எம்பி டோலா சென், ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங், காங்கிரஸ் எம்பிக்கள் ராஜீவ் சதவ், ரிபுன் போரா, சையத் நசீர் உசேன், சிபிஐ (எம்) எம்பிக்கள் கே. கே. ராகேஷ், எலமரம் கரீம் ஆகிய 8 எம்பிக்கள் ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதாவது வரும் அக்.

1ம் தேதி வரை நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடர் வரை, 8 எம்பிக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அமளி உருவானது.

இதனால் காலை 9 மணிக்கு கூடிய கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் காலை 10 மணிக்கு மீண்டும் கூட்டம் தொடங்கி நடந்தது.

.

மூலக்கதை