விவசாயிகளை பாதிக்கும் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு; மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்....மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்த முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
விவசாயிகளை பாதிக்கும் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு; மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்....மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்த முடிவு

சென்னை: திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று காலை அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வேளாண் மசோதாக்களை கொண்டு வந்துள்ள மத்திய அரசை கண்டித்தும், ஆதரவு அளித்த அதிமுக அரசை கண்டித்தும் மிகப்பெரிய போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய 3 மசோதாக்களும் மக்களவை, மாநிலங்களவையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டன. இந்த மூன்று வேளாண் சட்டங்களும்  விவசாயிகளுக்கு எதிரானவை, கார்ப்பரேட்டுகளுக்கு, தனியார்களுக்குச்  சாதகமானவை.

விவசாயத்தையும், நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் அழிப்பவை என்று  கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் இந்த சட்டத்தை எதிர்த்து பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மேலும் மத்திய அரசின் இந்த 3 சட்டங்களுக்கு எதிராக வருகிற 25ம் தேதி பாரத் பந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் இந்த சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த சட்டத்தை கண்டித்து வருகிற 25ம் தேதி தமிழகத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த 3 மசோதாக்கள் விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் சட்டம் என்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இதே போல காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 சட்டங்கள் குறித்து விவாதிக்க திமுக தலைமையில் 21ம் தேதி(இன்று) அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10. 30 மணியளவில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி,  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்  முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள்  கட்சி தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலார் ஈஸ்வரன், திராவிடர் கழகம் பொருளாளர் குமரேசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த துணை தலைவர் அப்துர் ரஹ்மான், இந்திய ஜனநாயக  கட்சி தலைவர் ரவி பச்சை முத்து உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான 3 மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் இந்த மசோதாக்களை கொண்டு வந்த மத்திய பாஜக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டங்களுக்கு ஆதரவு அளித்த அதிமுக அரசுக்கு எதிராகவும் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டங்களை எதிர்த்து தமிழகத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் மிகப் பெரிய அளவிலான போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்  வருகிற 25ம்  தேதி நடைபெறும் பாரத் பந்த்துக்கு முழு ஆதரவு தெரிவிப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மார்ச் 24ம் தேதி முதல், கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க திமுக சார்பில் நடத்தப்பட்ட அனைத்து கூட்டங்களும் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

6 மாதத்திற்கு பிறகு நடைபெற்றுள்ள இந்த அனைத்து கட்சி கூட்டம், சமூக இடைவெளியுடன் நேரில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை