ஐபிஎல் கிரிக்கெட் 3வது லீக்; சன்ரைசர்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதல்: விறுவிறுப்பான ஆட்டத்தை எதிர்நோக்கும் ரசிகர்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐபிஎல் கிரிக்கெட் 3வது லீக்; சன்ரைசர்ஸ்ராயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதல்: விறுவிறுப்பான ஆட்டத்தை எதிர்நோக்கும் ரசிகர்கள்

துபாய்; ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 3வது லீக் ஆட்டத்தில் இன்று சன்ரைசர்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. விறுவிறுப்பான ஆட்டத்தை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 3வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், வார்னர் தலைமையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும்  ேமாதுகின்றன. துபாயில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7. 30 மணிக்குத் தொடங்குகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பெங்களூரு அணி 6 ஆட்டங்களிலும், ஐதராபாத் அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌.

ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. பெங்களூரு அணி 2009ம் ஆண்டு கெவின் பீட்டர்சன் தலைமையிலும், 2011ம் ஆண்டு டேனியல் வெட்டோரி தலைமையிலும் இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ளது.

அதன்பின்பு அணியின் தலைமை பொறுப்பை விராட் கோலி ஏற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்ற முதல் 3 ஆண்டுகளில் பெங்களூரு அணி ‘ப்ளே ஆப்’ வரை கூட முன்னேறவில்லை.



பின்னர் அணியில் பல மாற்றங்களை மேற்கொண்டு 2015ம் ஆண்டு 3வது இடத்தை பெற்ற ஆர். சி. பி, 2016ம் ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறியது. புதிதாக அணிக்கு வாங்கப்பட்டுள்ள ஆரோன் பிஞ்ச் தொடக்க வீரராக இறங்க உள்ளார்.

இது அவர் கால்பதிக்கும் 8வது அணியாகும். கோலி, டிவில்லியர்ஸ் ஜோடி வழக்கம் போல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

பந்து வீச்சில் சாஹல், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ் வலுசேர்க்கிறார்கள். அதேநேரம் வார்னர் தலைமையிலான ஐதராபாத் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழ்கிறது.

கடந்தாண்டு பெங்களூருக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 185 ரன்கள் குவித்து சாதனை படைத்த வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் இப்போதும் அதே பார்மில் காத்திருக்கிறார்கள். சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷித்கான், முகமது நபி இருவரும் இறங்கும் பட்சத்தில் கேன் வில்லியம்சனுக்கு அணியில் இடம் கிடைக்காது.

புவனேஷ்வர்குமார், மனிஷ் பாண்டே, சஹா, கலீல் அகமது என்று திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை.

எனவே, இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

.

மூலக்கதை