அமெரிக்க அதிபர் ட்ரம்பை கொல்ல சதியா? : வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்ட விஷம் தடவிய கடிதம்! ;புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை!!

தினகரன்  தினகரன்
அமெரிக்க அதிபர் ட்ரம்பை கொல்ல சதியா? : வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்ட விஷம் தடவிய கடிதம்! ;புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை!!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொடிய விஷ ‘பார்சல்’ அனுப்பப்பட்டது குறித்து புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்க அதிபருக்கு அனுப்பப்படும் அனைத்து தபால்களும் ‘ஆப்சைட் ஸ்கிரீனிங்’ முறையில் தணிக்கை செய்யப்பட்டு, அதிபரின் சிறப்பு அதிகாரிக்கு அனுப்பப்படும். அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன் அதிபர் டிரம்புக்கு வந்த ஒரு ‘பார்சல்’ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த பார்சல் தொகுப்பு வெள்ளை மாளிகையை அடைவதற்கு முன்பே தடுத்து அதிகாரிகள் சோதித்தனர். அதில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருந்ததால், பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் (எப்பிஐ) சிறப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். டிரம்ப் பெயரிட்ட தபால் பார்சல் எங்கிருந்து வந்தது? யார் அனுப்பியது? என்பது குறித்து புலனாய்வு விசாரணை நடத்தப்பட்டது. எப்பிஐ சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்க அரசாங்க அஞ்சல் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட சந்தேகத்திற்கிடமான கடிதம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. இருந்தும், அதிபர் டிரம்பிற்கு அனுப்பப்பட்ட பார்சல் கடிதத்தில், ‘ரிச்சின்’ என்ற ஆபத்தான கொடிய விஷ பவுடர் இருந்தது. விஷ மருந்து அடங்கிய தொகுப்பு கனடாவிலிருந்து அனுப்பப்பட்டிருக்கக்கூடும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. டெக்சாஸில் உள்ள முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட பார்சலுடன், இந்த பார்சல் ஒத்த போகிறது. அதனால், கனடாவிலிருந்து அனுப்பிய நபருக்கும், இந்த நபருக்கும் தொடர்பு இருக்கலாம். கனடா சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டது. ‘ரிச்சின்’ என்பது ஆமணக்கு பீன்ஸில் இயற்கையாகக் காணப்படும் விஷமாகும். பயங்கரவாத தாக்குதலில் பயன்படுத்தப்படும். இதனை உட்கொண்டால், குமட்டல், வாந்தி, குடல்களின் உட்புற ரத்தப்போக்கு ஏற்படும். தொடர்ந்து கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகங்கள் செயலிழந்து சுவாச மண்டலம் பாதிக்கப்படும். அதன்பின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். முன்னதாக 2018ம் ஆண்டில் டிரம்புக்கு வந்த ஒரு பார்சலில், இதேபோன்று விஷ பவுடர் அனுப்பப்பட்டது. இவ்விவகாரத்தில் கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை