விவசாய மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு: மசோதா நகலை கிழித்து எதிர்க்கட்சியினர் போராட்டம்: அவை தலைவர் மேசையின் மைக் உடைப்பு!!!

தினகரன்  தினகரன்
விவசாய மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு: மசோதா நகலை கிழித்து எதிர்க்கட்சியினர் போராட்டம்: அவை தலைவர் மேசையின் மைக் உடைப்பு!!!

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இதில் 11 மசோதாக்களை நிறைவேற்ற ஆளும் பாஜ அரசு திட்டமிட்டிருந்தது. இதில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின்  விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை முதல் நாளே தாக்கல் செய்யப்பட்டது. இவற்றில் இரண்டு மசோதாக்கள் கடந்த 17ம் தேதி மக்களவையில்  நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாபில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் வரும் 25ம் தேதி பஞ்சாப் பந்துக்கு அழைப்பு  விடுத்துள்ளன. இதற்கிடையே, விவசாய மசோதாக்கள் மாநிலங்களவையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியினர்,மசோதாக்களை நாடாளுமன்ற நிலை குழு மற்றும்  தேர்வு குழுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர். இருப்பினும், மசோதா குறித்து விவாதிக்கப்பட்டதால், எதிர்க்கட்சியின் தொடர் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரியன், அவை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மீது மசோதா நகலை கிழித்து எரிந்தார். மேலும், பல்வேறு எம்.பிக்கள் மசோதா நகலை கிழித்து எரிந்தனர். மசோதாவிற்கு எதிராக அவை  தலைவரை முற்றுகையிட எம்.பிக்கள் முயற்சி செய்தபோது, அவை காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இருப்பினும், அவை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மேசையில் இருந்த மைக் உடைக்கப்பட்டது. இப்படியாக, தொடர்ந்து,  அமளியில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டதால், மசோதா மீது வாக்கு எதுவும் நடத்தப்படாமல் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

மூலக்கதை