சவுதியில் 1,20,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித கால்தடங்கள் கண்டுபிடிப்பு

தினமலர்  தினமலர்
சவுதியில் 1,20,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித கால்தடங்கள் கண்டுபிடிப்பு

வாஷிங்டன்: சவுதி அரேபியாவில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பண்டையகால மனித நாகரிகம் தொடர்பாக உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆய்வாளர்கள் மனிதன் வாழ்ந்த இடங்கள், வாழும் முறைகள், பயன்படுத்திய பொருட்கள் மூலமாக வாழ்ந்த காலத்தை ஆய்வு செய்கின்றனர்.

அந்தவகையில், வடக்கு சவுதி அரேபியாவில் 1,20,000 ஆண்டுகள் பழமையான மனித கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சயின்ஸ் அட்வான்ஸ் என்ற பத்திரிகையில் ஆய்வு தொடர்பான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவில் உள்ள வறண்ட ஏரியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு ஏரி காணப்பட்டதால், அதிக அளவிலான மனிதர்கள் மற்றும் விலங்குகள் வந்திருக்க வாய்ப்புள்ளதாக ஆராயச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், ஒட்டகம், எருமை, யானை உள்ளிட்டவற்றை வேட்டையாடுவதற்காகவும் மனிதர்கள் இங்கே வந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 7 தடங்கள் மனிதனுடையது என கண்டறியப்பட்டுள்ளது. சில கால்தடங்கள் அளவில் வேறுபாடுடனும், அதிக இடைவெளியுடனும் காணப்படுகின்றன. மனிதனின் காலடி தடம் மட்டுமல்லாமல் மேலும் 233 தடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. அதேநேரத்தில் வேட்டையாட பயன்படுத்தியதற்கான ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆப்ரிக்காவில் இருந்து யுரேசியாவுக்கு சென்ற மக்கள், நீர் ஆதாரத்தை தேடி, சவுதி அரேபியாவுக்கு வந்திருக்கலாம் என ஆராயச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மூலக்கதை