டிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் வந்ததால் பரபரப்பு

தினமலர்  தினமலர்
டிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் வந்ததால் பரபரப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரைசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். இந்நிலையில் வெள்ளை மாளிகைக்கு சந்தேகத்திற்கிடமான கடிதம் ஒன்றை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். கனடாவிலிருந்து அனுப்பப்பட்டதாக முகவரியிட்ட அந்த கடிதத்தில், ரைசின் என்ற கொடிய விஷப்பொருள் தடவப்பட்டிருப்பதை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். வெள்ளை மாளிகைக்கு அந்த கடிதம் சென்றடைவதற்கு முன்பாகவே, வழக்கமான சோதனையின்போது அந்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி உளவுத்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், டிரம்பை குறிவைத்து கடிதம் அனுப்பப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து டிரம்ப் நிர்வாகம் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதற்கு முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு அப்போதைய அதிபர் பராக் ஒபாமாவிற்கு விஷப்பொருள் அடங்கிய கடிதம் அனுப்பப்பட்டது. கடிதம் அனுப்பிய நபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை