குறைந்தபட்ச ஆதரவு விலை நீடிக்கும், அரசு கொள்முதல் செய்யும் நடைமுறையும் தொடரும்; பிரதமர் மோடி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
குறைந்தபட்ச ஆதரவு விலை நீடிக்கும், அரசு கொள்முதல் செய்யும் நடைமுறையும் தொடரும்; பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: வேளாண் திருத்த சட்ட மசோதாக்கள் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் என பிரதமர் மோடி ட்விடரில் பதிவிட்டுள்ளார். நாடாளுமன்ற இரு அவைகளிலும் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். விவசாயிகளுக்கு சேவை செய்தற்காகவே மத்திய அரசு உள்ளதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தகம் மற்றும் வணிகம் மசோதா, விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா ஆகிய இரண்டு மசோதாக்கள் மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டன.  இந்த மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டால், குறைந்தபட்ச ஆதரவு விலை ரத்து செய்யப்படும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. இதனை மையமாக வைத்து விவசாயிகளும் போராட்டம் நடத்துகின்றனர். இந்நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் அரசு கொள்முதல் செய்யும் முறை தொடரும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ‘நான் ஏற்கனவே கூறியதையே மீண்டும் கூறுகிறேன். குறைந்தபட்ச ஆதரவு விலை நீடிக்கும், அரசு கொள்முதல் செய்யும் நடைமுறையும் தொடரும். விவசாயிகளுக்கு சேவை செய்யவே மத்திய அரசு இருக்கிறது. இந்த மசோதாக்கள் மூலம் எதிர்கால தொழில்நட்பத்தை விவசாயிகள் எளிதில் அணுக முடியும். இந்த மசோதாக்கள், உற்பத்தியை ஊக்குவிப்பதுடன் சிறந்த பலனை தரும். கட்டுப்பாடுகள், இடைத்தரகர்களின் பிடியில் இருந்து விவசாயிகளை விடுவிக்கும்’ என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை