அனுராக் காஷ்யப் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு : டிரண்டிங்கில் அனல்

தினமலர்  தினமலர்
அனுராக் காஷ்யப் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு : டிரண்டிங்கில் அனல்

மும்பை : பிரபல ஹிந்தித் திரைப்பட இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் மீது ஹிந்தி நடிகையான பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை டுவிட்டரில் வைத்துள்ளார். இது பாலிவுட்டில் புயலை கிளப்பி இருப்பதுடன் சமூகவலைதளங்களில் டிரண்ட் ஆனது.

பாலிவுட்டின் பிரபல இயக்குனர் அனுராஷக் காஷ்யாப். ''தேவ் டி, கேங்ஸ் ஆப் வசிப்பூர், பாம்பே டாக்கீஸ், பாம்பே வெல்வெட்'' உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். தமிழில் நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் மீது ஹிந்தி நடிகை பாயல் கோஷ் என்பவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில், “அனுராக் காஷ்யப் என்னிடம் அத்துமீறி மிகவும் மோசமான முறையில் நடந்தார். பிரதமர் நரேந்திர மோடிஜி, இந்த கிரியேட்டிவ் நபர் எப்பேர்ப்பட்ட கெட்ட எண்ணம் கொண்டவர் என்பதை இந்த நாடு தெரிந்து கொள்ளட்டும். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இதனால் எனக்கும், என் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை நான் அறிவேன். தயவு செய்து உதவுங்கள்,” என பிரதமரையும், 'டேக்' செய்து பதிவிட்டுள்ளார் பாயல்.

ஆனால் இதை அனுராக் மறுத்துள்ளார். ''என் மீது நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதரமற்றவை. என் வாயை அடைப்பதற்கு எடுத்த நீண்டகால முயற்சி இது. என்னை அமைதியாக்கும் முயற்சியில், நீங்கள் இன்னும் சில பெண்களையும், சில பாலிவுட் குடும்பத்தினரையும் இந்த பிரச்சினைக்குள் இழுத்துள்ளீர்கள். என் மனைவிகளோ, காதலிகளோ, என்னுடன் பணிபுரிந்த நடிகைகளோ, அல்லது நான் சந்தித்த பெண்களோ யாராயினும் இது போன்று நடந்து கொள்ளவில்லை. எது உண்மை, எது பொய் என உங்கள் வீடியோவை பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ளட்டும். வரம்புடன் நடந்து கொள்ளுங்கள். உங்கள் கேள்விக்கு ஹிந்தியில் பதிலளித்தமைக்கு மன்னிக்கவும்'' என தெரிவித்துள்ளார்.

பாயல் கோஷின் இந்த குற்றச்சாட்டு தற்போது பாலிவுட்டில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ஹிந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை, மராத்திய அரசுக்கு எதிராக அதிரடி கருத்துக்களைக் கூறும் கங்கனா விவகாரம் என பரபரப்பில் உள்ளது பாலிவுட். இப்போது இந்த விவகாரத்தாலும் மேலும் பரபரப்பாகி உள்ளது.

அனுராக் காஷ்யாப்பிற்கு ஆதரவாகவும், எதிராகவும் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதன்காரணமாக டுவிட்டரில், #AnuragKashyap, #PayalGhosh, #MeToo போன்ற ஹேஷ்டாக்குகள் இந்திய அளவில் டிரண்ட் ஆகின.

மூலக்கதை