கார்த்திக்ராஜாவை அழைத்து வரும் மிஷ்கின்

தினமலர்  தினமலர்
கார்த்திக்ராஜாவை அழைத்து வரும் மிஷ்கின்

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின், தீவிர இளையராஜா ரசிகரும் கூட. கடைசியாக அவர் இயக்கிய 'சைக்கோ' படத்திற்கும் இசை இளையராஜாதான். அப்படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களும் சூப்பர்ஹிட்டாகின. மேலும், படத்தின் பின்னணி இசையும் வழக்கம் போல ரசிக்கப்பட்டது.

தன்னுடைய அடுத்த படமாக 'பிசாசு 2' படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் மிஷ்கின். ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜா, தம்பி யுவன் ஷங்கர் ராஜா அளவிற்கு பிரபலம் ஆகவில்லை என்றாலும் மிகத் திறமையான ஒரு இசையமைப்பாளர்.

அவரது இசையில் கடைசியாக 2018ம் ஆண்டு 'படை வீரன்' படம் வெளிவந்தது. அதன்பிறகு 'பிசாசு 2' படத்திற்குத்தான் இசையமைக்கப் போகிறார்.

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த 'பிசாசு' படத்தின் முதல் பாகத்தில் அவர் அறிமுகப்படுத்திய அரோல் கொரேலி தான் இசையமைத்திருந்தார். ஆனால், இரண்டாம் பாகத்திற்கு அவரை மாற்றிவிட்டு கார்த்திக்ராஜாவுடன் முதல் முறையாக இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

மூலக்கதை