ஐ.நா.,வில் மோடி உரை; இந்திய பிரதிநிதி பெருமிதம்

தினமலர்  தினமலர்
ஐ.நா.,வில் மோடி உரை; இந்திய பிரதிநிதி பெருமிதம்

நியூயார்க்: ''ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றவுள்ள உரை, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்,'' என, ஐ.நா.,வுக்கான இந்திய பிரதிநிதி, டி.எஸ்.திருமூர்த்தி கூறியுள்ளார்.

சமீபத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினருக்கு நடந்த தேர்தலில், இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில், ஐ.நா., பொதுச் சபையின், 75வது ஆண்டு கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள, அந்த அமைப்பின் தலைமையகத்தில், நாளை துவங்கவுள்ளது. அதைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளில், சர்வதேச நாடுகளின் தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். ஐ.நா., அமைப்பை தோற்றுவித்ததில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உள்ளது. எனவே, பிரதமர் மோடியும் இதில் உரையாற்ற உள்ளார். ஐ.நா., பொதுச் சபையின் ஆண்டு கூட்டம் மட்டுமல்லாமல், பொது விவாதத்திலும் பங்கேற்று, பிரதமர் உரையாற்ற உள்ளார். இந்த இரண்டு நிகழ்வுகளும் அடுத்த வாரம் நடக்கவுள்ளன.

இது குறித்து, ஐ.நா.,வுக்கான இந்திய பிரதிநிதி, டி.எஸ்.திருமூர்த்தி கூறியதாவது:ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா காலடி எடுத்து வைத்துள்ள இந்த சிறப்பான நேரத்தில், பொதுச் சபையிலும், பொது விவாதத்திலும் பங்கேற்று, பிரதமர் மோடி ஆற்றவுள்ள உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.இந்த இரண்டு நிகழ்வுகளிலும், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்று, பிரதமர் உரையாற்றவுள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை