விரைந்து குணமடைகிறார் பாடகர் எஸ்.பி.பி.,

தினமலர்  தினமலர்
விரைந்து குணமடைகிறார் பாடகர் எஸ்.பி.பி.,

சென்னை :''எஸ்.பி.பி.,யால் தினமும், 20 நிமிடங்கள் வரை அமரமுடிகிறது; தற்போது அவர் உணவு எடுத்துக்கொள்வதால் விரைவில் மீண்டு வருவார்,'' என, அவரது மகன் சரண் நேற்று தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்குள்ளான பிரபல திரைப்பட பின்னணி பாடகர் ஸ்.பி.பாலசுப்ரமணியம்,75, ஆக., 5 முதல் சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவருக்கு, 'எக்மோ' உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளின் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையுடன், எம்.ஜி.எம்., மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

உடல் உறுப்புகள் சீராக இயங்கிவரும் நிலையில், நுரையீரல் தொற்று முழுவதையும் குணப்படுத்தும் சிகிச்சை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்.பி.பி., மகன் சரண் நேற்று சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது:


அப்பாவின் உடல் நிலையில் தொடந்து முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது. 'எக்மோ' மற்றும் 'வென்டிலேட்டர்' உதவியுடன் சிகிச்சை தொடர்கிறது. தற்போது தொற்று எதுவும் இல்லை. நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தினமும், 15 நிமிடங்கள் வரை, 'பிசியோதெரபி' அளிக்கப்படுகிறது.

டாக்டர்கள் உதவியால் தினமும், 20 நிமிடங்கள் வரை அவரால் அமர முடிகிறது. நேற்று முதல் (நேற்று முன்தினம்) அவர் உணவு எடுத்துக்கொள்கிறார். இது உடலுக்கு தெம்பூட்டுவதுடன், விரைந்து குணமடையவும் வழிவகுக்கிறது. அவர் மீண்டுவர பிரார்த்தனை செய்யும் நலம் விரும்பிகளையும், சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழுவினரையும் என்னால் மறக்கமுடியாது.
இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை