நேரம் எப்படி பறக்கிறது: யுவராஜ் ‘பிளாஷ் பேக்’ | செப்டம்பர் 19, 2020

தினமலர்  தினமலர்
நேரம் எப்படி பறக்கிறது: யுவராஜ் ‘பிளாஷ் பேக்’ | செப்டம்பர் 19, 2020

புதுடில்லி: இந்திய அணியின் முன்னாள் ‘ஆல்–ரவுண்டர்’ யுவராஜ் சிங் 38. கடந்த ஆண்டு அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்த இவர், 40 டெஸ்ட் (1900 ரன், 9 விக்கெட்), 304 ஒருநாள் (8701 ரன், 111 விக்கெட்), 58 சர்வதேச ‘டுவென்டி–20’ (1177 ரன், 28 விக்கெட்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

கடந்த 2007, செப். 19ல் டர்பனில் நடந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் யுவராஜ் சிங் தொடர்ச்சியாக 6 சிக்சர் விளாசினார். இவர், இச்சாதனை படைத்து நேற்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைந்தது.

இம்மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் விதமாக, அப்போது சிக்சர் அடித்த புகைப்படத்தை யுவராஜ் தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில், ‘‘13 ஆண்டுகள்! நேரம் எப்படி பறக்கிறது!! மறக்க முடியாத நினைவுகள்,’’ என, தெரிவித்திருந்தார்.

இதற்கு ஸ்டூவர்ட் பிராட், ‘‘அன்று இரவு பந்து பறந்ததைவிட நேரம் குறைவாக பறக்கிறது,’’ என, பதில் தெரிவித்திருந்தார். 

மூலக்கதை