'சலாம் சென்னை' குறும்பட 'சிடி' வெளியீடு

தினமலர்  தினமலர்
சலாம் சென்னை குறும்பட சிடி வெளியீடு

சென்னை : கொரோனா முன் களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து, போலீசார், 'சலாம் சென்னை' என்ற விழிப்புணர்வு குறும்பட, 'சிடி'யை வெளியிட்டுள்ளனர்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், நடிகர் - நடிகையர் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ள, சலாம் சென்னை என்ற குறும்பட சிடியை, சென்னை போலீசார் தயாரித்துள்ளனர்.அதற்கான வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னை, வேப்பேரியில் உள்ள, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

சிடியை, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெளியிட, ஜிப்ரான் மற்றும் கூடுதல் கமிஷனர் தினகரன் ஆகியோர் பெற்றனர். இந்நிகழ்ச்சியில், கூடுதல் கமிஷனர்கள், அமல்ராஜ், கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், மகேஷ்குமார் அகர்வால் பேசியதாவது:கண்காணிப்பு கேமரா பற்றி, சிடி வெளியிடப்பட்டு, மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது கொரோனா கள பணியாளர்கள் பற்றி, சிடி வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகள் தொடரும்.சென்னை போலீசில், இதுவரை, 2,400 பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இவர்களில், 2,100க் கும் மேற்பட்டோர், கொரோனா தொற்றில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பியுள்ளனர். இவர்களின் தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது.இந்த குறும்படத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் பங்கேற்றுள்ளனர்.இவ்வாறு, அவர் பேசினார்.

மூலக்கதை