வியட்நாமில் மீண்டும் சர்வதேச விமான சேவை தொடக்கம்

தினமலர்  தினமலர்
வியட்நாமில் மீண்டும் சர்வதேச விமான சேவை தொடக்கம்

ஹனோய் : கொரோனா தொற்றுக்கு மத்தியில், வியட்நாம் 5 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் சர்வதேச விமான சேவையை துவங்கியது.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. கொரோனா தொற்றை கட்டுக்குள் வைக்க அனைத்து நாட்டு அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்கின்றன. வியட்நாமில் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதில், அந்நாட்டு அரசு பல்வேறு கட்டங்களாக நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றன. பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்றுக்காக விமான சேவைகள் முடக்கப்பட்டன. வியட்நாமிலும் கொரோனா பாதிப்புகளுக்காக சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டது. வியட்நாம் அனைத்து சர்வதேச விமானங்களையும் மார்ச் மாத இறுதியில் நிறுத்தியது. 5 மாதங்களுக்கு பிறகு, வியட்நாம் இன்று (செப்.,19) சர்வதேச விமான சேவைகளை தொடங்கியது.


இன்று (சனிக்கிழமை) காலை, 60 பயணிகளை ஏற்றிச் சென்ற வியட்நாம் ஏர்லைன்ஸ் ஹனோய் நகரில் உள்ள நொய் பாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து டோக்கியோவுக்கு புறப்பட்டதாக கூறப்படுகிறது. விமான பயணம் மேற்கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் வியட்நாமின் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஜப்பானுக்கு சென்று படிப்பு மற்றும் வேலையில் இருப்பவர்கள். இந்த விமானம் ஏராளமான ஜப்பானிய நாட்டினரையும் கொண்டு சென்றதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. செப்.,மாதத்தில், வியட்நாம் ஏர்லைன்ஸ், ஜப்பானுக்கு மேலும் 3 விமானங்களை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் டோக்கியோவிலிருந்து ஹனாவோய் (வியட்நாம் தலைநகர்) செல்லும் தலைகீழ் பாதை பின்னர் ஏற்பாடு செய்யப்படும்.


கொரோனா அச்சுறுத்தலால், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் விமான பயணம் மேற்கொள்ளும் பயணி, கட்டாயமாக கொரோனா எதிர்மறை சான்றிதழ் ( சோதனையில் கொரோனா இல்லை என்பதை உறுதிபடுத்தும் சான்றிதழ்) வைத்திருக்க வேண்டும் எனவும், அதன்பிறகே பயணத்திற்கு அனுமதிக்கப்படுவதாகவும் கூறுகிறது. வியட்நாமிலும் விமான பயணி 72 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட PCR Test சோதனையில் கொரோனா இல்லை என்பதை உறுதிசெய்யும் சான்றிதழை வைத்திருப்பது அவசியம்.

நாட்டில் இதுவரை 1,068 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இன்று காலை நிலவரப்படி 35 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 வாரங்களுக்கும் மேலாக எந்தவொரு உள்ளூர் பரவலும் நாடு முழுவதும் பதிவு செய்யப்படவில்லை என்று நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை