மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு இல்லை; தமிழகம் உட்பட பல மாநிலங்களில் ஒரேமாதிரி முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு இல்லை; தமிழகம் உட்பட பல மாநிலங்களில் ஒரேமாதிரி முடிவு

புதுடெல்லி: மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைபடி நாடு முழுவதும் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்கள் ஒரே முடிவாக, மத்திய அரசு குறிப்பிட்ட தேதியில் பள்ளிகளை திறக்கும் முடிவை ஒத்திவைத்துள்ளன.

கொரோனா பொது முடக்கம் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டிருக்கும் பள்ளிகளை நாளை மறுநாள் (செப். 21) முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

அதாவது, பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்த அனுமதியை அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரியாக பார்க்கவில்லை.

ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு வேறுபடுவதைப் போலவே, பெற்றோரும் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதனால், நாளை மறுநாள் நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு என்பது, ஒத்திவைக்கப்பட்ட ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து யோசிக்கவே முடியும் என்று கல்வித் துறை அறிவித்துள்ளது.

பீகார், மத்திய பிரதேச மாநில அரசுகளும் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த ஆலோசனையையும் மேற்கொள்ளவில்லை.

ஆனால், கர்நாடகா, உத்தரபிரதேசம், அசாம், உத்தரகாண்ட், ஆந்திரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் 9 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பதில் இறுதி முடிவு எடுக்கவில்லை.

டெல்லி அரசு அனைத்து பள்ளிகளும் செப். 30 வரை தொடர்ந்து மூடப்பட வேண்டும்.

9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு செல்லலாம் என்று தெரிவித்துள்ளது. பீகாரில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே வகுப்புகளை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அரியானா அரசு, கர்னால் மற்றும் சோனிபட் மாவட்டங்களில் உள்ள இரண்டு அரசுப் பள்ளிகளில் 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சோதனை அடிப்படையில் வகுப்புகளைத் தொடங்க முடிவு செய்துள்ளது.

கேரளாவில் இந்த மாதம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் அரசு, இந்த மாத இறுதி வரை பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பள்ளிகள் நாளை மறுநாள் முதல் தன்னார்வ அடிப்படையில் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

குஜராத் அரசு, நாளை மறுநாள் முதல் சாதாரண வகுப்புகளை மீண்டும் தொடங்க முடிவு செய்யவில்லை. அசாமில் 10 - 12ம் வகுப்பு மாணவர்கள், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் தங்கள் பள்ளிகளுக்கு செல்லலாம் என்று அறிவித்துள்ளது.

இருப்பினும், மேற்கு வங்கம், கோவா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், பஞ்சாப், ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம் மற்றும் பிற மாநிலங்கள் இன்னும் வகுப்புகள் மீண்டும் தொடங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை.

.

மூலக்கதை