பாக்., 'மாஜி' பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பிடிக்க கைது 'வாரன்ட்'

தினமலர்  தினமலர்
பாக்., மாஜி பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பிடிக்க கைது வாரன்ட்

இஸ்லாமாபாத் : பிரிட்டனில் உள்ள, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை கைது செய்ய, பாக்., அரசு, 'வாரன்ட்' அனுப்பியுள்ளது.

பாகிஸ்தானில், மூன்று முறை பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரீப், 70. இவருக்கு, கடந்த, 2018 ஜூலை மாதம், ஊழல் வழக்கில், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன், அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் மருமகன் முகமது சப்தாரும், சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜாமின்:


இதற்கிடையே, நவாஸ் ஷெரீப்பிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சிகிச்சைக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மேலும் மோசமடைந்ததை தொடர்ந்து, நீதிமன்றம் அவருக்கு, ஜாமின் வழங்கியது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் சிகிச்சை பெற, அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பரில், நவாஸ் லண்டன் சென்றார். எட்டு வாரங்களில், நாடு திரும்ப வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், அவர் பாகிஸ்தானுக்கு திரும்பவில்லை.இதற்கிடையே, வரும், 22ம் தேதி, நவாஸ் ஷெரீப்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என, பாக்., வெளியுறவுத் துறை செயலரிடம், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தின் உதவி பதிவாளர், உத்தரவிட்டிருந்தார்.

கைது வாரன்ட்


இதையடுத்து, நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கக்கோரி, நவாஸ் ஷெரீப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நவாஸ் ஷெரீப்பிற்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பித்தது. அதை, பாக்., அரசு, லண்டனில் உள்ள பாக்., துாதரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இதில், சட்ட ரீதியிலான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, துாதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

மூலக்கதை