வாய்ப்பு: கடலூர் மாவட்டத்தில் உளுந்து, பயிறு சாகுபடிக்கு...டெல்டா பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி

தினமலர்  தினமலர்
வாய்ப்பு: கடலூர் மாவட்டத்தில் உளுந்து, பயிறு சாகுபடிக்கு...டெல்டா பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி

கடலுார்: கடலுார் மாவட்ட காவிரி பாசன பகுதிகளுக்கு, 12 ஆண்டுக்கு பிறகு முன்கூட்டியே தண்ணீர் திறந்ததால், சம்பா மற்றும் உளுந்து, பயிறு என இருபோக சாகுபடிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடலுார் மாவட்ட காவிரி பாசன பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, குறிஞ்சிப்பாடி அகிய வட்டங்களில் வடவாறு, கொள்ளிடம் வடக்கு ராஜன் வாய்க்கால், வீராணம் ஏரி, கான்சாகிப் வாய்க்கால், பாசிமுத்தான் ஓடை, கவரப்பட்டு வாய்க்கால், வெள்ளாறு வடக்கு ராஜன் வாய்க்கால் ஆகியவற்றின் மூலம் சுமார் 1.50 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. கடலுார் மாவட்ட காவிரி பாசன பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் மூன்று போக சாகுபடி இருபோகமாகவும், இருபோகசாகுபடி ஒருபோகமாகவும், சில ஆண்டுகளில் ஒருபோக சாகுபடிக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டது.ஜூன் மாதம் தண்ணீர் திறந்தால் மட்டுமே தமிழக காவிரி பாசன மாவட்டங்களில் பின்சம்பா சாகுபடி தொடங்கி அறுவடைக்கு பிறகு பயிறு வகை சாகுபடி நடக்கும். இதனால் விவசாயிகளுக்கு இரு போக சாகுபடி மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும்.கடந்த 20 ஆண்டுகளில் 2011 ம் ஆண்டு தென்மேற்கு பருவ மழையால் மேட்டூர் அணை விரைவாக நிரம்பி முழு கொள்ளளவை எட்டியதால் பாதுகாப்பு கருதி முன் கூட்டியே ஜூன் 6 ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. 2000, 2001, 2006, 2008 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே ஜூன் 12 ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது, மேட்டூர் நிரம்பியதால் ஜூன் 12ல் அணை திறக்கப்பட்டது.

கல்லணையிலிருந்து கொள்ளிடம் கீழணைக்கு வந்து சேர்ந்தது. கடந்த 30 நாட்களுக்கும் மேலாக கீழணை மற்றும் வீராணம் ஏரி முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டுகளில் மேட்டூர் அணை தாமதமாக திறந்ததால் சம்பா சாகுபடிக்கு வாய்ப்பே இல்லாமல் பின் சம்பா சாகுபடியும் தாமதமாக துவங்கப்பட்டது. இதனால் கடலுார் மாவட்ட காவிரி பாசன பகுதிகளில் பின் சம்பா பருவத்தில் ஒரு போகம் மட்டுமே நெல் சாகுபடி செய்ய முடிந்தது.இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு முன்கூட்டியே டெல்டா பாசனத்திற்கு கடந்த ஆகஸ்ட் 31 ம் தேதி கீழணை மற்றும் வீராணம் ஏரி பாசனத்திற்கு தன்ணீர் திறந்தது, விவசாயிகளுக்கு சாதகமாக உள்ளது.

இதனால் பின் சம்பா பருவமான செப்டம்பர் மாதம் விதைவிடும் பணியை துவக்கி ஜனவரி மாதம் அறுவடை செய்ய முடியும். அடுத்து உளுந்து, பயிறு சாகுபடி செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் டெல்டா பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.காவிரி விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரன் கூறுகையில், கடந்த காலங்களில் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த நமது முன்னோர்கள் பட்டம் பார்த்து சாகுபடி செய்தனர். தண்ணீர் பிரச்னையால் குறிப்பிட்ட காலத்தில் விவசாயம் செய்ய முடியவில்லை.தற்போது, மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதுடன் பருவ மழையும் ஏமாற்றாது என்ற நிலை உள்ளது.

எனவே, கடலுார் மாவட்ட காவிரி பாசன விவசாயிகள் மேட்டூர் அணையின் பாசன நீரை பெற்று பின்சம்பா பருவமான செப்டம்பர் - ஜனவரி மாதத்தில் நெல் சாகுபடி மற்றும் ஜனவரி - மார்ச் மாதத்தில் உளுந்து, பயிறு சாகுபடி என இரண்டு போக சாகுபடிக்கு உள்ள வாய்ப்பை பயன்படுத்தி கூடுதல் வருவாய் ஈட்ட வாய்ப்பு கிடைத்துள்ளது என, தெரிவித்தார்.

மூலக்கதை