தீவிரவாதிகள் என நினைத்து 3 அப்பாவி வாலிபர்களை சுட்டுக் கொன்ற ராணுவம்

தினகரன்  தினகரன்
தீவிரவாதிகள் என நினைத்து 3 அப்பாவி வாலிபர்களை சுட்டுக் கொன்ற ராணுவம்

காஷ்மீர்: காஷ்மீரில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் 3 வாலிபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ராணுவம் விதிமுறைகளை மீறியுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூலை மாதம் 18-ம் தேதி தெற்கு காஷ்மீரில் 3 வாலிபர்கள் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் தீவிரவாதிகள் என கூறப்பட்டது.  ஆனால், ‘கொல்லப்பட்ட மூவரும் தீவிரவாதிகள் அல்ல. ரஜோரி மாவட்டத்தில் உள்ள அசிம்புரா பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள்  காணாமல் போனது பற்றி அம்சிபுரா காவல் நிலையத்திலும் புகாரும் கொடுக்கப்பட்டிருக்கிறது,’ என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால், ராணுவ ஒழுங்குமுறை ஆணையம் இது பற்றி விசாரணை நடத்தியது. அதில், 3 வாலிபர்களும் ரஜோரி மாவட்டத்தில் வசித்து வந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.   இது பற்றி ராணுவ செய்தித்தொடர்பாளர் ராஜேஷ் காலியா கூறுகையில், ‘‘இந்த விசாரணை 4 வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. தாக்குதலின்போது பின்பற்ற வேண்டிய 1990-ம் ஆண்டு ராணுவத்துக்கான சிறப்பு அதிகார சட்டத்தை ராணுவ வீரர்கள் தவறாக பயன்படுத்தி உள்ளனர். மூன்று பேரையும் பார்த்ததும் சுட்டுக் கொன்றுள்ளனர். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி எதிர்தாக்குதல் நடத்துவதற்காக சில விதிமுறைகள் உள்ளன. அவை மீறப்பட்டுள்ளன. விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

மூலக்கதை