பள்ளி பாட புத்தகங்களில் இந்திய பகுதிகளுடன் மேப்: நேபாளம் தொடர்ந்து குடைச்சல்

தினகரன்  தினகரன்
பள்ளி பாட புத்தகங்களில் இந்திய பகுதிகளுடன் மேப்: நேபாளம் தொடர்ந்து குடைச்சல்

காத்மண்ட்: இந்திய பகுதிகளுடன் கூடிய புதிய வரைப்படத்தை வெளியிட்ட நேபாள அரசு, தனது கல்வி பாடத் திட்டத்திலும் அதை சேர்த்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா -  நேபாளம் இடையே எல்லை பிரச்னை இருந்து வருகிறது. இந்திய பகுதிகளான லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா ஆகியவற்றை நேபாளம் சொந்தம் கொண்டாடியதோடு தங்கள் நாட்டுடன் இணைத்து புதிய வரைபடத்தை தயாரித்தது. இந்த புதிய வரைபடத்தை கடந்த மே மாதம் வெளியிட்டது. இதை நாடாளுமன்றத்தில் சட்டமாகவும் நிறைவேற்றியது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.  இந்நிலையில், இந்திய பகுதிகள் இணைக்கப்பட்ட புதிய வரைபடத்தை நேபாள அரசின் பள்ளி பாடத் திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது.  9 மற்றும் 12ம் வகுப்பு பாடப் புத்தகங்களில் இந்த திருத்தி அமைக்கப்பட்ட அரசியல் வரைப்படம் இடம் பெற்றுள்ளது. ‘நேபாளத்தின் பிரதேசம் மற்றும் எல்லைப் பிரச்னை தகவல்கள்,’ என்ற தலைப்பில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்துக்கு கல்வி அமைச்சர் கிரிராஜ் மணி போக்கேரல் முன்னுரை எழுதி உள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இந்த 3 பகுதிகளையும் நேபாளம் சொந்தம் கொண்டாடுவதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை