வேளாண் மசோதா பற்றி பொய்களை பரப்பி விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழி நடத்துகின்றன: பிரதமர் குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
வேளாண் மசோதா பற்றி பொய்களை பரப்பி விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழி நடத்துகின்றன: பிரதமர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘மக்களவையில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய 3 வேளாண் மசோதாக்களும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு கேடயங்கள்,’ என பிரதமர் மோடி ஆதரித்து பேசினார். மேலும், இந்த மசோதாக்கள் பற்றி எதிர்க்கட்சிகள் போலியான தகவல்களை பரப்பி, விவசாயிகளை தவறாக வழிநடத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். வேளாண் துறை சார்ந்த 3 சட்ட மசோதாக்களை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இதில், 2 மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு விரோதமானவை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளமும் எதிர்ப்பு தெரிவிப்பதால் பாஜ கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மசோதாக்களை அரசு நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிரோமணி அகாலி தளத்தை சேர்ந்த மத்திய உணவு பதனிடுதல் துறை அமைச்சர்  ஹர்சிம்ரத்  கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார். நாடு முழுவதும் குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் இந்த 3 சட்ட மசோதாக்களுக்கு விவசாயிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.இந்நிலையில், பீகாரின் கோசி ஆற்றின் மீது 1.9 கிமீ தூரத்தில் ரூ.516 கோடியில் கட்டப்பட்டுள்ள ‘கோசி ரயில் மகாசேது’ ரயில் பாலத்தை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த இவ்விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: விவசாயத்தில் சீர்த்திருத்தம் செய்யக்கூடிய 3 சட்ட மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது வரலாற்று சிறப்புமிக்கதாகும். இது விவசாயிகளுக்கு விரோதமானவை அல்ல. விவசாயிகளுக்கு பாதுகாப்பு கேடயமாக இருக்கக் கூடியவை. இதன் மூலம், விவசாயிகள் இனி நாட்டின் எந்த பகுதியிலும் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்ய முடியும். அவர்களே நேரடியாக விலையை பேசி விற்பதால் நல்ல லாபமும் பெற முடியும். அதே சமயம், அரசு கொள்முதல் செய்வது தற்போதுள்ளபடியே நீடிக்கும். குறைந்தபட்ச ஆதரவு விலை வழிமுறையும் எப்போதும் இருப்பதைப் போலவே தொடரும். குறைந்தபட்ச ஆதரவு விலையின் மூலம் விவசாயிகளுக்கு தகுந்த விலையை வழங்குவதில் இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. கடந்த 6 ஆண்டில் பாஜ கூட்டணி அரசைப் போலக இதுவரை எந்த அரசும் விவசாயிகளுக்காக பல்வேறு நன்மைகளை செய்து கொடுத்ததில்லை.யார் இடைத்தரகர்களுடன் சேர்ந்து, தங்கள் பாக்கெட் நிரம்புவதற்காகவும், சுய லாபத்திற்காகவும் இந்த சட்ட மசோதாக்கள் போன்ற புதிய வாய்ப்புகளை எதிர்க்கிறார்கள் என்பதை விவசாயிகள் நன்கு அறிவார்கள். இப்போது கொண்டு வரப்பட்ட இந்த சட்ட மசோதாக்களில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதையேதான் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் செய்து தருவதாக அதன் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது அவர்கள் எதிர்த்து நின்று போராட்டம் நடத்துவதாக கூறுகிறார்கள்.இந்த விஷயத்தில், பல ஆண்டுகள் நாட்டை ஆண்டவர்கள் போலியான தகவல்களை பரப்பி விவசாயிகளை தவறாக வழிநடத்தப் பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஹர்சிம்ரத் கவுர் பாதலின் கடிதத்தை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஏற்றுக் கொண்டார். தனது ராஜினாமா குறித்து டெல்லியில் ஹர்சிம்ரத் நேற்று அளித்த பேட்டியில், ‘‘உடல்நலம் பாதிக்கப்பட்ட எனது தாயை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து விட்டுதான், நாடாளுமன்றத்துக்கு நேற்று வந்தேன். விவசாய அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதே அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால், எனது குரலுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. அரசு இந்த 3 மசோதாக்களையும் நிறுத்தி வைத்து, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்,’’ என்றார்.காங்கிரஸ்தான் காரணம்கோசி ரயில் பாலம் குறித்து பிரதமர் மோடி பேசுகையில், ‘‘கடந்த 2003ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் இந்த ரயில் பால திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அப்போதைய அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக நிதிஷ் குமார் இடம் பெற்றிருந்தார். அடுத்த ஆண்டே வாஜ்பாய் ஆட்சி மாறிய பிறகு இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதன் பின் யார் ஆட்சியில் இருந்தார்கள், ரயில்வே துறை யாரிடம் இருந்தது என்ற விஷயத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால், அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் வேகமாக செயல்பட்டிருந்தால், இந்த ரயில் பாலம் கட்டி முடித்து பல ஆண்டுகள் ஆகியிருக்கும்,’’ என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை மறைமுகமாக தாக்கி பேசினார். மோடி கேட்கும்பிறந்தநாள் பரிசுநேற்று முன்தினம் தனது 70வது பிறந்த தினத்தை கொண்டாடிய பிரதமர் மோடிக்கு, உலகத் தலைவர்கள், உள்நாட்டு தலைவர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு நன்றி தெரிவித்துள்ள மோடி, நாட்டு மக்களிடம் பிறந்த நாள் பரிசு ஒன்றும் கேட்டுள்ளார்.இது பற்றி நேற்று அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் உள்ள மக்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இந்த வாழ்த்துகள் நாட்டுக்கு சேவை புரிவதற்கான பலத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உத்வேகத்தையும் எனக்கு அளிக்கும். உங்கள் பிறந்தநாளுக்கு என்ன பரிசு வேண்டும் என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். அனைவரும் முறைப்படி மாஸ்க் அணியுங்கள். சமூக விலகலைக் கடைபிடியுங்கள். கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களுக்குச் செல்வதைத் தவிருங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். நம் பூமியை ஆரோக்கியம் மிகுந்ததாக உருவாக்குங்கள். இதுவே, நான் கேட்கும் பிறந்தநாள் பரிசு,’ என கூறியுள்ளார்.

மூலக்கதை