பிரதமர் தேசிய நிவாரண நிதி பற்றி சர்ச்சை கருத்து மக்களவையில் அமளி

தினகரன்  தினகரன்
பிரதமர் தேசிய நிவாரண நிதி பற்றி சர்ச்சை கருத்து மக்களவையில் அமளி

புதுடெல்லி: பிரதமரின் தேசிய நிவாரண நிதி குறித்து மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் கூறிய கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால்,  மக்களவை 4 முறை ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் வருமான வரி ரிட்டன் தாக்கல், ஆதாருடன் பான் எண் இணைப்பு ஆகியவைகளுக்கான கால அவகாசம் நீட்டிப்பு, பிஎம் கேர்சுக்கு நன்கொடை அளிப்போருக்கு வருமான வரி விலக்கு, ஜிஎஸ்டி  உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்தது. இதற்காக. இயற்றப்பட்ட வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (சில விதிகளை தளர்த்துவது) அவசரச் சட்டத்தை கடந்த மார்ச் மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கான வரி சட்ட மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது பிஎம் கேர்ஸ் நிதியம் குறித்து நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசியதாவது: கொரோனா போன்ற பேரிடர், அவசர காலங்களில் மக்களுக்கு உதவுவதற்காகவே இந்த நிதியம் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், எல்லாவற்றிலும் எதிர்க்கட்சிகள் குறை காண்கின்றன. மின்னணு வாக்கு இயந்திரம் தவறு, முத்தலாக் தவறு, ஜிஎஸ்டி தவறு என அரசின் எந்த ஒரு நல்ல முயற்சியையும் தவறாகவே பார்க்கின்றனர். பிஎம் கேர்ஸ் நிதியத்தில் என்ன தவறு கண்டீர்கள்? பிரதமர் கொரானாவுக்கு எதிராக போராடும் போது எதிர்க்கட்சிகள் பலமுறை நீதிமன்றத்துக்கு சென்று வந்தன. பரம ஏழைகள் கூட பிஎம் கேர்சுக்கு நிதி உதவி செய்கிறார்கள். அதை எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்கின்றனர்.  பிஎம் கேர்ஸ் அரசியலமைப்புபடி அமைக்கப்பட்ட பொது தொண்டு அறக்கட்டளையாகும். பிரதமர் தேசிய நிவாரண நிதியமானது ஒற்றை குடும்பத்தின் ஆதாயத்துக்காக தொடங்கப்பட்டதாகும். இவ்வாறு அவர் கூறினார்.நேரு குடும்பத்தை குறிப்பிட்டு அனுராக் தாக்கூர் இவ்வாறு பேசிதயற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாலை 4 மணிக்கு முதல் முறையாக அரை மணி நேரத்துக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும், அனுராக் தாக்கூர் மன்னிப்பு கேட்கக் கோரி காங்கிரஸ் எம்பிக்கள் கோஷமிட்டதால் 2வது முறையாக அரை மணி நேரமும், அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து மேலும் 2 முறையும் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதில், மற்ற எதிர்க்கட்சிகளும் சேர்ந்து கொண்டு வரி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் சிறிது நேரம் கூச்சல், குழப்பம் நிலவியது. ‘ஜிஎஸ்டி பங்கை நிச்சயம் தருவோம்’மசோதா தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ‘‘மாநிலங்களுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி பங்களிப்பை மத்திய அரசு நிச்சயம் வழங்கும். மாநில அரசுகளின் அதிகாரத்தை நாங்கள் எடுத்துக் கொண்டு சென்று விட மாட்டோம். எங்கள் பொறுப்பில் இருந்தும் ஓடி விட மாட்டோம். எனவே, கட்டாயம் நிலுவைத் தொகை வழங்கப்படும். பிரதமர் மோடி முதல்வராக இருந்தவர். மாநில அரசுகளின் பிரச்னைகள், தேவைகளை அறிந்தவர். எதிர்க்கட்சிகள் கூறுவது போல, ஜிஎஸ்டி கவுன்சில் அல்லது சிஜிஎஸ்டி சட்டத்தை நாங்கள் மீறவில்லை,’’ என்றார்.

மூலக்கதை