சே... இப்படி ஏமாந்து விட்டோமே! வெங்காய விவசாயிகள் கண்ணீர்

தினமலர்  தினமலர்
சே... இப்படி ஏமாந்து விட்டோமே! வெங்காய விவசாயிகள் கண்ணீர்

பேரூர்:பட்டறைகளில் இருப்பு வைத்திருந்த சின்ன வெங்காயம் அழுகி வருவதால், ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை மாவட்டத்தில், தொண்டாமுத்துார் ஒன்றியம் சின்ன வெங்காயம் சாகுபடியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த வைகாசி பட்டத்தில், ஆயிரம் எக்டரில் நடவு செய்யப்பட்டது.கடந்த மாதம் அறுவடை துவங்கிய போது, கிலோ, ரூ.23க்கு மட்டுமே கொள்முதலானது. அதனால், பட்டறைகளில் இருப்பு வைக்கப்பட்டது. கடந்த வாரத்தில், முதல் தரம் கிலோ, ரூ. 50 வரை கொள்முதலாகி வந்தது. சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியானது.இந்நிலையில், மத்திய அரசு அனைத்துவித வெங்காய ஏற்றுமதிக்கும் தடை விதித்தது.
இதையடுத்து, வியாபாரிகள் வருகை குறைந்து, விற்பனை சரிந்துள்ளது.தற்போது, மழை மற்றும் குளிர்ந்த சீதோஷ்ணத்தால், அழுகத் துவங்கியுள்ளது. பட்டறைகளை பிரித்து, அழுகல் வெங்காயங்களை அகற்றும் பணி நடக்கிறது. செலவு அதிகரிப்பதுடன், டன் கணக்கில் சேதமாகியுள்ளது. அதனால், ஏற்றுமதிக்கு விதித்த தடையை நீக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில், 'இன்னும் ஒரு மாதம் மட்டுமே, வெங்காயம் தாக்குப் பிடிக்கும். அதன் பின் மொத்தமும் வீணாகி விடும். விவசாயிகளுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தும் மத்திய அரசு, ஏற்றுமதி தடையை நீக்க வேண்டும். சின்ன வெங்காயம் நேரடி கொள்முதல் நிலையங்களை அமைக்க, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

மூலக்கதை