டிக்டாக், வீ சாட்டிற்கு அமெரிக்காவில் தடை

தினமலர்  தினமலர்
டிக்டாக், வீ சாட்டிற்கு அமெரிக்காவில் தடை

வாஷிங்டன் : வரும் ஞாயிறு முதல், சீனாவின் டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்தின் 'டிக்டாக்' செயலிக்கு தடை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். இந்த செயலி வாயிலாக அமெரிக்கர்களை பற்றிய தகவல்கள் திருடப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். அதேநேரத்தில் டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனம் வாங்கினால் அதற்கு உரிமம் அளிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் டிக்டாக் செயலியை வாங்குவதற்காக பைட் டான்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆனால், இதனை ஏற்க மறுத்த அதிபர் டிரம்ப் , இரு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி டிக்டாக் செயலியின் பெரும்பாலான பங்கு பைட் டான்ஸ் நிறுவனத்திடமே இருப்பதாகவும் ஆரக்கிள் நிறுவனத்திடம் குறைந்த பட்ச பங்கு மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த ஒப்பந்தத்தை முழுமையாக ஆய்வு செய்து இதனால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரியவந்தால் மட்டுமே இந்த ஒப்பந்தத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.தேச பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை என தெரிவித்திருந்தார்.

'டிக்டாக்' போலவே சீன நிறுவனத்தின் மற்றொரு செயலியான 'வி சாட்'டுக்கும் அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 'அமெரிக்காவில் உள்ள 'வீ சாட்' பயன்பாட்டாளர்கள் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது. வீ சாட் செயலிக்கு தான் தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர அதன் பயன்பாட்டாளர்களை குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை' என அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் ஞாயிறு முதல் டிக்டாக் மற்றும் வீசாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படுவதாக, அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: வரும் ஞாயிறு முதல் டிக்டாக் மற்றும் வீசாட் செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதன் மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சி மூலம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, அமெரிக்கர்ளின் நலனை பாதுகாக்க , தனது ஆட்சியில் எதையும் செய்ய அதிபர் டிரம்ப் தயாராக உள்ளார் என்பதை காட்டுகிறது. அதிபரின் உத்தரவின் பேரில், அமெரிக்கர்களின் தனப்பட்ட தகவல்கள், அமெரிகக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை சீனர்கள் சட்டவிரோதமாக கையாள்வதை தடுக்கவும், அமெரிக்காவின் மாண்புகள், ஜனநாயக விதிகளை பாதுகாத்துள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை