மோடி மிகச் சிறந்த தலைவர்: பிறந்த நாள் வாழ்த்து கூறிய டிரம்ப்

தினமலர்  தினமலர்
மோடி மிகச் சிறந்த தலைவர்: பிறந்த நாள் வாழ்த்து கூறிய டிரம்ப்

வாஷிங்டன் : ''மிகச் சிறந்த தலைவரும், என் உண்மை யான நண்பருமான, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,'' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின், 70வது பிறந்த தினம், நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, நம் நாட்டில் உள்ள தலைவர்கள் மட்டுமல்லாமல், சர்வதேச தலைவர்களும், அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:இந்திய பிரதமர் மோடி, மிகச் சிறந்த தலைவர். என் உண்மையான நண்பர். அவருக்கு என் இதயப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். இவ்வாறு, அதில் அவர் தெரிவித்துள்ளார்.

டிரம்பிற்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தியில், 'அமெரிக்க அதிபரின் வாழ்த்துக்களுக்கு நன்றி. அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான நட்பு மிகவும் வலிமையானது மட்டுமல்ல; ஒட்டு மொத்த மனித குலத்துக்கும் நன்மை தரக் கூடியது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். டிரம்ப், தன் வாழ்த்துச் செய்தியுடன், கடந்த பிப்ரவரியில் குஜராத் மாநிலம், ஆமதாபாதில் நடந்த, 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில், பிரதமர் மோடியுடன் பங்கேற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பதிவிட்டு உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், 1.25 லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. ஐ.நா., கூட்டம்'அமெரிக்க அதிபர் டிரம்ப், ஐக்கிய நாடுகள்சபை பொதுச் சபை கூட்டத்தில் நேரடியாக பங்கேற்க மாட்டார்' என, அதிபரின் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

மூலக்கதை