'ஏர் இந்தியா' கடனை குறைக்க அரசு பரிசீலனை

தினமலர்  தினமலர்
ஏர் இந்தியா கடனை குறைக்க அரசு பரிசீலனை

புதுடில்லி,: பொதுத் துறையைச் சேர்ந்த, ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்கு விற்பனையை தள்ளி வைத்து, கடனை மேலும் குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
கடந்த, 2019, மார்ச், 31 நிலவரப்படி, ஏர் இந்தியாவுக்கு, 58 ஆயிரத்து, 255 கோடி ரூபாய் கடன் இருந்தது.

இதில், 29 ஆயிரத்து, 464 கோடி ரூபாய் கடனை, ஏ.ஐ.ஏ.எச்.எல்., என்ற பொதுத் துறை நிறுவனத்திற்கு மாற்றி, ஏர் இந்தியாவின், 100 சதவீத பங்குகளை விற்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான ஒப்பந்தம், இந்தாண்டு, ஜன., 27ல் வெளியிடப்பட்டது. ஆனால், ஏர் இந்தியாவின் கடன், இழப்பு ஆகியவை காரணமாக, பங்குகளை வாங்க, எந்த நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து, விண்ணப்ப காலம், நான்கு முறை நீட்டிக்கப்பட்டது.

இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, 1,000 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது.இந்நிலையில், ஊரடங்கால், முதல் காலாண்டில், 2,570 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.கடன் அதிகரித்து வருவதால், ஏர் இந்தியா பங்குகளை விற்பது சிரமமாக உள்ளது. இதையொட்டி, பங்கு விற்பனை திட்டத்தை தள்ளி வைத்து, முடிந்தவரை கடனை மேலும் குறைப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
பங்குகள் வேண்டி விண்ணப்பிக்க, அக்., 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் எந்த நிறுவனமும், பங்குகளை வாங்க முன்வரவில்லையெனில், விண்ணப்ப காலத்தை, மத்திய அரசு நீட்டிக்காது.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை