கூகுள் பிளே ஸ்டோரிலிருந்துநீக்கப்பட்ட ‘பேடிஎம்’செயலி மீண்டும் இணைப்பு

தினமலர்  தினமலர்
கூகுள் பிளே ஸ்டோரிலிருந்துநீக்கப்பட்ட ‘பேடிஎம்’செயலி மீண்டும் இணைப்பு

புதுடில்லி, செப். 19–

இந்தியாவில், பணப்பரிவர்த்தனைகளுக்காக அதிகம் பயன்படுத்தப்படும்,‘பேடிஎம்’ செயலியை, கூகுள் நிறுவனம் தன்னுடைய, பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. இதனால், பேடிஎம் செயலியை பயன்படுத்துவோர் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.


நடவடிக்கை

இந்தியாவில், ஆன்லைன் மூலமான பணப்பரிவர்த்தனைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று பேடிஎம். இதனை, லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி, ஆன்லைன் விளையாட்டுகளிலும், ஆன்லைன் சூதாட்டங்களிலும் வாடிக்கையாளர்களை பங்குபெறச் செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு, பேடிஎம் செயலி நீக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பேடிஎம் நிறுவனத்தின் மற்ற செயலிகளான,‘பேடிஎம் மால்’, பேடிஎம் மணி’ போன்ற மற்ற செயலிகள் வழக்கம் போல இடம்பெற்றுள்ளன.இந்தியாவில், சூதாட்டத்திற்கு எதிரான தன் புதிய நெறிமுறைகளை கூகுள் இந்தியா, இன்று வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக, பேடிஎம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்படி பிளே ஸ்டோரில் இருந்து, பேடிஎம் நீக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இதுதொடர்பாக, கூகுள் தன்னுடைய பிளாக்கில் தெரிவித்துள்ளதாவது:கூகிளின் கொள்கையின்படி, ஆன்லைன் சூதாட்டங்கள் மற்றும் விளையாட்டுப் பந்தயங்களுக்கு ஒழுங்குபடுத்தப்படாத செயலிகளை நாங்கள் அனுமதிப்பதில்லை.ஏதேனும் ஒரு செயலி, தன் வாடிக்கையாளரை, பிற இணையதள பந்தயங்களில் பங்கேற்கச் செய்து, அவர்களுக்கு பணமும், ரொக்கப் பரிசுகளும் வழங்கினால், அது எங்களது கொள்கைகளை மீறுவதாகும்.

மேலும், ஏதேனும் ஒரு செயலி விதிமீறலில் ஈடுபட்டால், அவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து, விதிமுறைகளை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தப்படும.தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கூகுள் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இந்த தகவலை பேடிஎம் நிறுவனமும் தன் டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்து உள்ளது.அதில், தங்களது செயலியை தற்காலிகமாக, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து புதிதாக பதிவிறக்கம் செய்ய முடியாது என்றும், ஏற்கனவே பயன்படுத்தி வருபவர்கள், புதிய பதிப்புகளை பதிவிறக்கம் செய்ய இயலாது என்றும் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு

மேலும், தங்களது சேவை விரைவில் மீண்டும் தொடரும் என்றும், வாடிக்கையாளர்கள் பணம் பாதுகாப்பாக உள்ளதாகவும்; அவர்கள் வழக்கம் போல, பேடிஎம் செயலியைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.பேடிஎம் செயலி, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டாலும், ஆப்பிள் நிறுவனத்தின், ஆப் ஸ்டோரில் தொடர்கிறது.

இதனிடையே பேடிஎம் டுவிட்டிரில் பதிவிட்டுள்ள புதிய டுவிட்டரில் இன்று பிற்பகல், கூகுளில் இருந்து அவர்கள் எங்கள் பயன்பாட்டை இடைநிறுத்துகிறார்கள் என்று தகவல் கிடைத்தது, சூதாட்டம் குறித்த அவர்களின் பிளே ஸ்டோர் கொள்கைகளை மீறுவதாக அவர்கள் நம்புகிறார்கள். பேடிஎம்மில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் முற்றிலும் சட்டபூர்வமானவை என்பது தெளிவாகத் தெரிந்தாலும், பிளே ஸ்டோர் கொள்கை தேவைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சியில் கேஷ்பேக் கூறுகளை தற்காலிகமாக அகற்றியுள்ளோம்.

பயன்பாட்டை மீட்டமைக்க கூகுள் உடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுகிறோம். எங்கள் பயனர்கள் இருப்பு மற்றும் இணைக்கப்பட்ட கணக்குகள் நூறு சதவீதம் பாதுகாப்பானவை என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். தற்போதுள்ள எல்லா பயன்பாடுகளிலும் எங்கள் சேவைகள் முழுமையாக செயல்படுகின்றன, மேலும் அனைவரும் முன்பு போலவே பேடிஎம்மை தொடர்ந்து பயன்படுத்த முடியும். இவ்வாறு பேடிஎம் நிறுவனம் தன்டுவிட்டரின் புதிய பதிப்பில் தெரிவித்துள்ளது.

மூலக்கதை