தபால் ஓட்டுகள் மூலம் மோசடி: எதிர்க்கட்சி மீது டிரம்ப் புகார்

தினமலர்  தினமலர்
தபால் ஓட்டுகள் மூலம் மோசடி: எதிர்க்கட்சி மீது டிரம்ப் புகார்

வாஷிங்டன்: 'அதிபர் தேர்தலில் வெளி நாடுகளின் தலையீட்டை விட, தபால் ஓட்டுகள் மூலம் எதிர்க்கட்சிகள் மோசடி நடத்த திட்டமிட்டுள்ளதே மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் குற்றஞ் சாட்டியுள்ளார்.


அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், அதிபர், டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன் போட்டியிடுகிறார்.'கொரோனா' வைரஸ் பரவலை அடுத்து, தபால் ஓட்டுகள் மூலம் ஓட்டுப் பதிவுகள் நடத்துவது குறித்து பெரும்பாலான மாகாணங்கள் ஆலோசனை நடத்தி வருகின்றன.

இது குறித்து, டிரம்ப் கூறியுள்ளதாவது:இந்த தேர்தலில், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் தலையீடு இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. அதைவிட மிகப்பெரிய அச்சுறுத்தலாக, தபால் ஓட்டுகள் உள்ளன. ஜனநாயக கட்சி ஆளும் மாகாண கவர்னர்கள், தபால் ஓட்டுகள் மூலம் தேர்தல் நடத்துவதற்கு பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதில் பெரும் மோசடி நடக்கும். சில இடங்களில், தபால் ஓட்டுச் சீட்டுகளே போலியாக அச்சடிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.இது, நம் நாட்டுக்கு அவமானமாகும். இந்த முறை நமக்கு உகந்ததல்ல. மிகவும் மோசடி நிறைந்தது. ஏற்கனவே, இந்தத் தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற, ஜனநாயக கட்சி திட்டமிட்டுள்ளது.அமெரிக்காவின் பாது காப்புக்கு எந்த பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டால் மட்டுமே, ஆரக்கிள் - டிக்டாக் நிறுவனங்களின் ஒப்பந்தத்துக்கு அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


இந்தியா மீது புகார்அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:இந்தியா, ஆப்கானிஸ்தான் உட்பட, 20 நாடுகள் மூலமாக போதைப் பொருட்கள் கடத்தல் நடக்கிறது. மேலும், போதைப் பொருள் உற்பத்தியும் அங்கு செய்யப்படுகிறது. இதை தடுக்க, இந்த நாடுகள், அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.பிடன் குற்றச்சாட்டுஅதிபர் தேர்தல் பிரசாரத்தில், 'கொரோனா' வைரஸ் தடுப்பூசி தொடர்பாக, டிரம்பும், ஜே பிடனும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வருகின்றனர். 'இது மக்களிடையே தடுப்பூசி தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தும்' என, டிரம்ப் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஜோ பிடன் கூறியதாவது:கொரோனாவுக்கு எதிராக அமெரிக்க விஞ்ஞானிகள் தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நான் விஞ்ஞானிகளை நம்புகிறேன். அவர்கள் கண்டுபிடித்துள்ள தடுப்பூசியையும் நம்புகிறேன். ஆனால், டொனால்டு டிரம்பை நம்ப மாட்டேன். இந்த தடுப்பூசி மூலம், அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை