கொரோனா தடுப்பூசி; 51% வாங்க பணக்கார நாடுகள் ஒப்பந்தம்

தினமலர்  தினமலர்
கொரோனா தடுப்பூசி; 51% வாங்க பணக்கார நாடுகள் ஒப்பந்தம்

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இதற்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த கொரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் வி' என்ற தடுப்பு மருந்து விரைவில் சந்தைக்கு வரவுள்ளது.இந்த தடுப்பு மருந்துகளின் விற்பனை வழிமுறைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமெரிக்காவின் 'ஆக்ஸிபேம்' (பஞ்சத்தை ஒழிப்பதற்கான ஆக்ஸ்போர்டு குழு) நிறுவனம், தனது ஆய்வறிக்கையை நேற்று வெளியிட்டது.

அதில் தெரிவித்துள்ளதாவது:உலகளவில் இதுவரை 5 கொரோனா தடுப்பு மருந்துகளே இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்த மருந்துகள்தான் விரைவில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மருந்துகளின் மொத்த உற்பத்தியில் சரிபாதியை பெறுவதற்கான ஒப்பந்தங்களை அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஹாங்காங், ஜப்பான், ஸ்விட்சர்லாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் பெற்றுவிட்டன.

அதாவது, மருந்துகளில் மொத்த விநியோகத்துக்காக கணக்கிடப்பட்டிருக்கும் 530 கோடி டோசில் 270 கோடி டோஸ்களை (51%) ஒப்பந்தத்தின்படி இந்த நாடுகள் பெற்றுவிடும். மீதமுள்ள 260 கோடி டோஸ்களை பெற இந்தியா, வங்கதேசம், சீனா, பிரேசில், இந்தோனேசியா, மெக்சிகோ உள்ளிட்ட வளரும் நாடுகள் ஒப்பந்தம் செய்திருக்கின்றன.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


'உலகம் முழுவதும் பரவியிருக்கும் ஒரு கொள்ளை நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து, அனைத்து நாட்டு மக்களுக்கும் கிடைக்க வேண்டும். பணத்துக்காக ஒரு சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் மருந்துகளை வழங்குவது மனித உரிமைகளுக்கு எதிரானது' என, சமூக ஆர்வலர்கள் விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை