3 வேளான் திருத்த மசோதாக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானாவில் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டம் : விவசாய அமைப்புகள் அறிவிப்பு!!

தினகரன்  தினகரன்
3 வேளான் திருத்த மசோதாக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானாவில் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டம் : விவசாய அமைப்புகள் அறிவிப்பு!!

சண்டிகர் :  மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 3 வேளான் திருத்த மசோதாக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப்பில் மூன்று நாட்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்த விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இது, அக்டோபர் 1ம் தேதி வரை வார விடுப்பின்றி, 18 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதன் முதல் நாளான்று விவசாய உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவற்றை விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். இந்த 3 மசோதாக்களும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு,’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த நிலையில், வேளாண்மை தொடர்பான சர்ச்சைக்குரிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்துப் பஞ்சாப், அரியானா மாநில உழவர் அமைப்புகள் செப்டம்பர் 24, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனிடையே மத்தியில் ஆளும் மோடி தலைமை பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய விவசாயச் சட்டங்கள் பசுமைப் புரட்சியின் நோக்கங்களைத் தோற்கடித்து விவசாயிகளின் வாழ்வுக்கும் வாழ்வாதாரங்களுக்கும் சாவுமணி அடிப்பது என்று பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி.க்கள் சட்ட நகல்களை எரித்து நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மூலக்கதை