வரலாற்று சிறப்புமிக்க வேளாண் சீர்திருத்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்க வகை செய்யும் : பிரதமர் மோடி உறுதி!!

தினகரன்  தினகரன்
வரலாற்று சிறப்புமிக்க வேளாண் சீர்திருத்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்க வகை செய்யும் : பிரதமர் மோடி உறுதி!!

டெல்லி : நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இது, அக்டோபர் 1ம் தேதி வரை வார விடுப்பின்றி, 18 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.இதன் முதல் நாளான்று விவசாய உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவற்றை விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். இந்த 3 மசோதாக்களும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது. ‘இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு,’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.வரலாற்று சிறப்பு மிக்க சீர்திருத்த மசோதாக்கள் எனவும் நாட்டின் வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு இது முக்கிய தருணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இடைத்தரகர்களின் பிடியில் இருந்து விவசாயிகளுக்கு விடுதலை கிடைக்கும் என குறிப்பிட்டுள்ள மோடி, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதற்கு தான் உத்தரவாதம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், உண்மையிலேயே விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாக்கள் இவை எனவும் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் வரலாற்று சிறப்புமிக்க இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்க வழிவகை செய்யும் என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் பல்வேறு சக்திகள் விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாகவும் விமர்சித்துள்ளார்.மேலும் விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்யும் நடைமுறையும் தொடரும் என்றும் விவசாயிகளுக்கு மோடி உறுதி அளித்துள்ளார். மேலும் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்து கூடுதல் லாபம் பெறுவதற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கு இந்த சீர்திருத்தம் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

மூலக்கதை