தங்கக்கடத்தல் வழக்கில் அமைச்சர் ஆஜர்: கேரளாவில் பினராயி அரசுக்கு நெருக்கடி

தினமலர்  தினமலர்
தங்கக்கடத்தல் வழக்கில் அமைச்சர் ஆஜர்: கேரளாவில் பினராயி அரசுக்கு நெருக்கடி

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய உயர் கல்வித் துறை அமைச்சர், கே.டி.ஜலீலிடம், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் நேற்று மீண்டும் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, அவர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, மாநிலம் முழுதும், காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இதனால், பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சந்தேகம்கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு,மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சிலிருந்து, அந்த நாட்டின் துாதரகத்தின் பெயரில், தங்கம் கடத்தப்பட்டது, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. துாதரகத்தின் முன்னாள் ஊழியரும், கேரள தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண் உள்ளிட்டோர், இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு உள்ளனர். தங்கக் கடத்தல் தொடர்பாக சுங்கத் துறை மற்றும் அமலாக்கத் துறையும், இதில் பயங்கரவாதிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து, என்.ஐ.ஏ.,வும் விசாரித்து வருகின்றன.

இந்நிலையில், கேரள உயர் கல்வித் துறை அமைச்சரும், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான, கே.டி.ஜலீலுக்கு, இந்த வழக்கில் தொடர்புஇருப்பதாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் சந்தேகித்தனர். கைது செய்யப்பட்டு உள்ள ஸ்வப்னாவுடன், அமைச்சர் ஜலீல், 53, ஜூன் மாதம் மட்டும், ஒன்பது முறை போனில் பேசியதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.விதி மீறல்இதற்கிடையே, வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியின்றி, அமைச்சர் ஜலீல், ஐக்கிய அரபு எமிரேட்சின் துாதரகத்தின் பெயரை பயன்படுத்தி, முஸ்லிம்களின் புனித நுாலான குரான் 'பார்சலை' பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியின்றி, பிற நாட்டு துாதரகங்களுடன், யாரும் நேரடி தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்ற விதி உள்ளது. இதை, ஜலீல் மீறியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நோட்டீஸ்

இது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள், ஜலீலிடம் சமீபத்தில் விசாரணை நடத்தினர். என்.ஐ.ஏ., தரப்பிலும் விசாரணைக்கு ஆஜராகும்படி, ஜலீலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதையடுத்து, கொச்சியில் உள்ள, என்.ஐ.ஏ., அலுவலகத்தில் நேற்று காலை ஜலீல் ஆஜரானார். ஊடகங்களின் கண்களில் படாமல் தவிர்க்கும் வகையில், காலையில், 6:00 மணிக்கு, என்.ஐ.ஏ., அலுவலகத்துக்கு ஜலீல் வந்தாலும், இது குறித்து தகவல் தெரிந்து, ஏராளமான பத்திரிகையாளர்கள் அங்கு திரண்டிருந்தனர்.தங்கக் கடத்தல் மற்றும் பார்சல் இறக்குமதி குறித்து, ஜலீலிடம், அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.இதற்கிடைய, காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், என்.ஐ.ஏ., அலுவலகம் முன் திரண்டு, ஜலீல், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.


திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் அருகிலும், எதிர்க்கட்சியினர் திரண்டு போராட்டம் நடத்தினர். 'பினராயி அரசே பதவி விலகு. அமைச்சர் ஜலீலை கைது செய்ய வேண்டும்' என, எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பினர்.அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும், போலீசார் கலைத்தனர். எதிர்க்கட்சியினர் மீது, தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. போலீசார் நடத்திய தடியடியில், எதிர்க்கட்சியினர் பலர் காயம் அடைந்தனர். போலீசார் மீது, போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கினர். இதில் சில போலீசார் காயம் அடைந்தனர்.பாலக்காட்டில் போலீசார் நடத்திய தடியடியில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., பலராம் உட்பட பலர் காயம் அடைந்தனர். போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில், 12 போலீசார் காயம் அடைந்தனர்.

கோட்டயம், கண்ணுார் உட்பட பல இடங்களில், அமைச்சர் பதவியை ஜலீல் ராஜினாமா செய்யக் கோரி, எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டங்களாலும், போலீசார் நடத்திய தடியடியாலும், கேரள மாநிலமே போர்க்களம் போல் காட்சிஅளித்தது.எதிர்க்கட்சியினரின் ஆவேச போராட்டத்தால், பினராயி விஜயன் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.இது குறித்து விவாதிப்பதற்காக, இடது ஜனநாயக முன்னணியில் உள்ள மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், தங்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளனர்.

மூலக்கதை