தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.9,000 கோடி தேவை

தினமலர்  தினமலர்
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.9,000 கோடி தேவை

''கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில், தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றுவது மாநில அரசுகள். எனவே, தமிழகத்துக்கு, 9,000 கோடி ரூபாயை, சிறப்பு நிதியாக, மத்திய அரசு வழங்க வேண்டும்'' என்று, பார்லிமென்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுகுறித்து, நேற்று ராஜ்யசபாவில், அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை, பேசியதாவது:கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில், தன்னலமற்ற வகையில் பணியாற்றும், சுகாதாரப் பணியாளர்கள், டாக்டர்கள்,நர்சுகள், லேப் டெக்னீசியன்கள், உள்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களை காக்க வேண்டியது, அரசின் கடமை.இதில், தமிழகம் திறம்பட செயல்பட, அதிக அளவிலான பரிசோதனைகளை மேற்கொள்வதும், தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உரிய நிதி ஒதுக்க முன்னுரிமை அளிப்பதும் தான் காரணம்.

தமிழக அரசு, இதுவரையில் 14,878 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இந்த நிதியில், மத்திய அரசின் பங்களிப்பு சொற்ப அளவிலேயே உள்ளது. நெருக்கடி கால நிதியாக, மத்திய
அரசிடமிருந்து கிடைத்ததெல்லாம், 512 கோடி ரூபாய் மட்டுமே.
எனவே, தமிழகத்தில், கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்புகளுக்கு தீர்வாக, 9,000 கோடி ரூபாய், சிறப்பு நிதியை வழங்க வேண்டும். மிக அதிகவருவாய் தரும் மாநிலமான தமிழகத்துக்கு, ஜி.எஸ்.டி., நிலுவை தொகையை தராமல் காலம் தாழ்த்துவது சரியல்ல.போதுமான நிதி வசதி, கைவசம் இருந்தால் தான், மாநில அரசுகளால், கொரோனா தொற்று சூழ்நிலையை, திறம்பட கையாள முடியும். எனவே, தமிழகத்துக்கு தர வேண்டிய நிலுவை நிதி அனைத்தையும், உடனடியாக மத்திய அரசு, விடுவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார். - நமது டில்லி நிருபர் -

மூலக்கதை