56 ஆயிரம் கிலோ மீட்டர் ஸ்கூட்டரில் பயணித்து தாயின் ஆசையை நிறைவேற்றிய மகன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
56 ஆயிரம் கிலோ மீட்டர் ஸ்கூட்டரில் பயணித்து தாயின் ஆசையை நிறைவேற்றிய மகன்

பெங்களூரு: 56 ஆயிரம் கிலோ மீட்டர் ஸ்கூட்டரில் பயணித்து ஆன்மிக சுற்றுலா அழைத்துச் சென்று தனது தாயின் ஆசையை பாசக்கார மகன் நிறைவேற்றியுள்ளார். அவர்கள் 33  மாதங்களுக்கு பிறகு நேற்று மைசூருவுக்கு வந்தனர்.

கர்நாடக மாநிலம் மைசூரு நகரை ஒட்டிய போகாதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது தாய் ரத்னம்மா (70).

கிருஷ்ணகுமார் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகுமாரின் தந்தை இறந்துவிட்டார்.

இதனால் அவரது தாய் ரத்னம்மா, தனிமையை உணருவதாக கிருஷ்ணகுமாரிடம் கூறியுள்ளார். மேலும் தான் ஹாசன் மாவட்டம் பேளூரில் உள்ள ஒலேபீடு கோயிலுக்கும், வெளிமாநிலங்களுக்கும் இதுவரை சென்றதில்லை என்றுகூறியுள்ளார்.

இதை கேட்ட கிருஷ்ணகுமார், தனது தாயை இந்தியா முழுவதும் ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிட்டார்.

அதன்படி கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி கிருஷ்ணகுமார் தனது தாயை ஆன்மிக சுற்றுலா அழைத்துச் சென்றார். அதாவது தனது தந்தை 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த ஸ்கூட்டரில் தாயை அமரவைத்து அவர் இந்த பயணத்தை மேற்கொண்டார்.

முதலில் பேளூர் ஒலேபீடு கோயிலுக்கு சென்ற அவர்கள் ஆந்திரா, மகாராஷ்டிரா, கோவா, புதுச்சேரி, தமிழ்நாடு, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டனர். அங்குள்ள இந்து கோயில்கள், மசூதிகள், பேராலயங்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஆன்மிக பயணம் செய்த தாயும் மகனும் நேற்று மைசூருவுக்கு வந்தனர். அவர்களுக்கு உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



2 ஆண்டுகள் 9 மாதங்களாக அதாவது 33 மாதங்கள் இந்த ஆன்மிக பயணத்தை அவர்கள் மேற்கொண்டு நிறைவு செய்துள்ளனர். சுமார் 56 ஆயிரம் கிலோ மீட்டர் அவர்கள் ஸ்கூட்டரிலேயே சுற்றியுள்ளனர்.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் தாய்க்கு ஆன்மிக தலங்களை சுற்றி காண்பித்து தாயின் ஆசையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் கிருஷ்ணகுமார் உள்ளார். அதே வேளையில் 70 வயதான ரத்னம்மா, தனது வயோதிகத்தை பொருட்படுத்தாமல் மகனுடன் 56 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து அனைத்து வழிபாட்டு தலங்களையும் பார்த்த பூரிப்பில் உள்ளார்.

கிருஷ்ணகுமார், தனது தாயார் மீதான அதீத அன்பாலும், தன்னை வளர்த்த அவரை இறுதிகாலம் வரை தானே பார்த்துக்கொள்ளவும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை